இலங்கைத் தமிழரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது கனடா!
இலங்கையில் பிறந்த கனேடிய பிரஜை ஒருவர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று றோயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பிறந்த கனேடிய குடிமகனான ஸ்ரீகஜமுகன் செல்லையாவை அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு திங்கட்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2019 அக்டோபரில் செல்லையா ஒரு படகில் ஹைட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த படகில் 28 இலங்கையர்கள் மற்றும் ஒரு இந்தியர் உட்பட 158 பயணிகளை இவர் கடத்திச் சென்றதாக டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் பொலிஸ்தெரிவித்துள்ளது.
இதன்போது சட்டவிரோத நுழைவு மற்றும் சட்டவிரோத நுழைவுக்கு உதவிய குற்றச்சாட்டுகளை செல்லையா எதிர்கொண்டார்.
இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார் மற்றும் 14 மாத சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்லையா மற்றும் படகில் இருந்த மற்றவர்கள் மீதான விசாரணையே இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான குற்றவியல் விசாரணைகளில் ஒன்றாகும். இதன் விளைவாக கனடா, யு.எஸ் மற்றும் இலங்கையிலும் கைது இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
தண்டனைக்காலம் முடிந்து செல்லையா கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் அவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவதால் அவரை தம்மிடம் ஒப்படைக்குமறு அமெரிக்க அதிகாரிகள் ஜூலை பிற்பகுதியில் கோரியுள்ளனர்.
பணத்திற்கு ஈடாக பல இலங்கை வெளிநாட்டினரை டர்க்ஸ் மற்றும் கைகோஸிலிருந்து கனடா, பஹாமாஸ் மற்றும் அமெரிக்கா வழியாக அழைத்துச் செல்ல செல்லையா திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுவதாக அமெரிக்க நீதித்துறை புதன்கிழமை கூறியது.
55 வயதான செல்லையா, மோகன் என்ற பெயரில் இந்த வேலையை செய்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை செல்லையா 2003 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் மனித கடத்தல் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை பெற்றார். என தெரிவிக்கப்படுகின்றது.