புன்னாலைக்கட்டுவனில் சிறப்பாக இடம்பெற்ற புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா VIDEO

ஆசிரியர் - Admin
புன்னாலைக்கட்டுவனில் சிறப்பாக இடம்பெற்ற புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா VIDEO

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் ஆலயத்தில் சனிக்கிழமை(24) புதிய நவகோண சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா சிறப்பாக இடம்பெற்றது.

தேவஸ்தான ஆதீன குருவும், மஹோற்சவ குருவுமான பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்கள் தலைமையில் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாக்  கிரியைகள் இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நவமித் திதியும், அமிர்தசித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையான நண்பகல்- 12 மணியளவில் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட பவனி ஆரம்பமானது.

சித்திரத்தேர் வெள்ளோட்டம் நிறைவுற்றதைத் தொடர்ந்து  சித்திரத்தேரை நிர்மாணித்த திருநெல்வேலி அம்பாள் சிற்பாலயத்தைச் சேர்ந்த சிற்பக் கலாபூஷணம் ஆறுமுகம் கந்தசாமி மற்றும் அவர் தம் குழுவினர், சித்திரத்தேர் வர்ண வேலையில் ஈடுபட்ட விஸ்வப் பிரம்மஸ்ரீ செல்லையா செல்வதாஸ் உள்ளிட்டோர் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டனர்.

 இந்த நிகழ்வில் தேவஸ்தான ஆதீன குரு, ஆலய நித்திய குரு சிவஸ்ரீ குகந்தனசர்மா மற்றும் சிவாச்சாரியார்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அம்பாள் அடியவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த-15 ஆம் திகதி ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நாளை புதன்கிழமை(28) முற்பகல் -10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. தேர்த் திருவிழாவில் பக்தர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

(எஸ்.ரவி-)