நேபாளத்தில் நிலச்சரிவு!! -19 பேர் பலி: 38 பேரைக் காணவில்லை-
நேபாளத்தில் நடந்த நிலச்சரிவில் 19 பேர் மரணமடைந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடி தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மேலும் பலர் மரணமடைந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள லிடி கிராமத்தின் மலைத்தொடர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு 170 ற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் நிரச்சரிவில் 37 குடும்பங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளன.
அன்றைய தினமே 11 உடல்கள் மீட்கப்பட்டன. மறுநாள் சனிக்கிழமை 2 குழந்தைகள் உட்பட 8 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 19 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.