SuperTopAds

மீண்டும் கமல் மீது கவுதமி பாய்ச்சல்!

ஆசிரியர் - Admin
மீண்டும் கமல் மீது கவுதமி பாய்ச்சல்!

கமல்ஹாசன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது என்று நடிகை கவுதமி கூறி உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் நடிகை கவுதமி தனது இணையதள பக்கத்தில் ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார். அதில், ‘கமல்ஹாசனுடன் 15 வருடம் சேர்ந்து வாழ்ந்தபிறகு அவரது நடவடிக்கை பிடிக்காததாலும் மகளின் எதிர்காலம் கருதியும் அவரைவிட்டு பிரிந்துவிட்டேன். கமலின் கட்சியில் இணைந்து செயல்படப்போவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அவரது படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினேன். அதற்கான சம்பளத்தை பல முறை கேட்டும் தரவில்லை’ என்று புகார் கூறியிருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில சமூக வலைத்தளத்தில் கவுதமி மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘பாஸ்ட் இஸ் பாஸ்ட்’ என்று நான் எழுதிய முந்தைய கடிதத்தில் முதல் வரியாக தொடங்கி இருந்தேன். கமல்ஹாசனிடம் எந்த வகையிலும், எதற்காகவும் எதுவும் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை தெரிவிக்கவே அப்படி குறிப்பிட்டிருந்தேன். கமலுடன் அவரது கட்சியில் இணைந்து செயல்படப்போவதாகவும் அவருக்கு ஆதரவு தரப்போவதாகவும் என்னைப்பற்றி வந்த தகவல்கள்தான் இதுபோன்ற ஒரு கடிதத்தை என்னை எழுதவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.

நான் பணியாற்றியதற்கான சம்பளம் மட்டுமே குறிப்பிட்ட கம்பெனியிலிருந்து கேட்டிருந்தேன். நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது. ஆனால் அதன் எதிர்விளைவாக வந்த பதிலடிகள் என்னை பெரிதும் பாதித்திருக்கிறது. நடந்தது என்ன என்பதுபற்றி எந்த விவரமும் சூழலும் இவர்களுக்கு தெரியாது. எனது முடிவுகள் மாற்றிக்கொள்ள முடியாததாகும். ஒரு தாயாக மீண்டும் வாழ்க்கையை தொடங்கவும், பாதுகாப் பான எதிர்காலத்தை கட்டமைக்கவும் தனிப்பட்ட முறையில் போராடி வருகிறேன். எனது சக்தியை பாசிடிவ்வாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்தவேண்டிய தேவை உள்ளது. வாழ்க்கையில் எவ்வளவோ நல்லவை, நேர்மை, மகிழ்ச்சி போன்றவை உள்ளது.

அதை நோக்கி நான் பயணிக்கிறேன். நல்ல மனம் படைத்தவர்கள், கருணை நிறைந்தவர்கள் மனிதர்கள் இந்த உலகில் உள்ளனர். அவர்களை என் வாழ்வில் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். கெட்ட, மகிழ்ச்சியற்ற தருணங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழும். ஆனால் நமக்கு அதை தேர்ந்தெடுக்க வாய்ப்புகளும் இருக்கிறது. பிரகாசமான வழியினை முடிவு செய்து சவால்களை நேர்மறையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். கடந்த 20 வருடமாக என் வாழ்வில் எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிறேன். நேர்மறை மற்றும் அமைதியை என் வாழ்வில் அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கவுதமி கூறி உள்ளார்.