SuperTopAds

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவிடம் கேள்வி எழுப்பவுள்ள மணி..! இறுதியும் உறுதியுமான தீர்மானம் எடுங்கள் ஒத்துழைக்க தயார் என ஆரதவாளர்கள் அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவிடம் கேள்வி எழுப்பவுள்ள மணி..! இறுதியும் உறுதியுமான தீர்மானம் எடுங்கள் ஒத்துழைக்க தயார் என ஆரதவாளர்கள் அழுத்தம்..

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்தும் பதவி நீக்கம் குறித்தும் தீர்மானம் எடுக்க காரணம் என்ன? என கட்சியின் மத்திய குழுவிடம் கேள்வி எழுப்ப மணிவண்ணன் தரப்பு தீர்மானம் எடுத்துள்ளது.

எனினும் பதவிகளிலிருந்து நீக்கியமை தொடர்பில் கையொப்பமிடப்படாத கடிதமே அனுப்பப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைத்தவுடன் மேற்கண்டவாறு கோரி வி.மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளார் என்று அவரது தரப்புகள் தெரிவித்தன.

அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எந்தவொரு தீர்மானத்தையும் ஆற அமர யோசித்து எடுக்குமாறு அவர்கள் நேரில் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவிகளிலிருந்து நீக்குவது என்று கடந்த வியாழக்கிழமை கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்தது. இதனை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது என்று கட்சி எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது சிறு குழுக்களை அமைத்து செயற்பட்டமை மற்றும் புலம்பெயர் தேசத்தில் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர் என 

கட்சியால் அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்புகளை பேணியமை போன்ற குற்றச்சாட்டுக்களே அந்தக் கட்சியின் மத்திய குழுவால் வி.மணிவண்ணனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு அவர் வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் தீர்மானத்தை ஒரு தரப்பு நியாயப்படுத்தும் அதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் மாற்றத்தை விரும்பிய இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியுள்ளது.