53% பெண்கள் வாழும் நாட்டில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன..? இதுவும் மாறவேண்டும்.. பவதாரணி ராஐசிங்கம் சிறப்பு பேட்டி..
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஹீலங்கா சுதந்திர கட்சியில் பவதாரணி ராஜசிங்கம் ஆகிய நான் போட்டியிடுகின்றேன்.
கேள்வி - நீங்கள் பெண்ணாக தேர்தலில் போட்டியிடுவதில் எதிர்கொண்ட சவால்?
பதில் - நான் எதிர்கொண்ட சவால் என்பதை விட சாவல்களை எதிர்கொண்டதால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு பெண்ணை பொறுத்தவரை அரசியல் மட்டுமல்ல வீட்டில் இருந்து வாசல் தாண்டுவதே பெரியதொரு சவால் ஆகும்.
பெண் என்றால் சத்தத்தை குறைத்து கதை பெரிதாக முயற்சி செய்யாதே என கூறும் சமூகம் பெண் ஆளுமைகளை ஏற்றுக்கொள்வதில்லை. பெண் என்றால் பாவம் என நினைக்கின்றனர். இது எனக்கு மட்டுமல்ல அரசியலில் உள்ள அத்தனை பேருக்கும் சவால் தான்.
கேள்வி - பெண்களுக்கு எதிரான சவால்களை எவ்வாறு வெற்றி கொள்ளலாம்?
பதில் - இந்த நாட்டில் 53 வீதம் பெண்கள். ஆனால் நாட்டை பிரதிபலிக்கும் நாடாளுமன்றில் எத்தனை பெண்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். பெண்களே பெண்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை. பல சமயங்களில் பெண்களின் வாக்குகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆண்களே காணப்படுகின்றனர். ஆகவே இம்முறை பெண்கள் நிச்சயமாக ஒரு பெண்ணுக்கு வாக்களிக்க வேண்டும்.
கேள்வி - உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கென 25 வீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்றிலோ மாகாண சபையிலோ இது தொடர்பிலான ஒதுக்கீடு எதுவும் இல்லையே?
பதில் - குறிப்பாக கடந்த உள்ளூராட்சி சபைகளில் 12 வீதமானோர் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட ஏனைய 13 வீதமானோரே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் மக்களே 25 வீதத்திற்கும் மேலாக பெண் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நிலமை உருவாகும். என்னை பொறுத்தவரை பெண்களுக்கு விசேட ஒதுக்கீடு என்பது தேவையற்ற ஒன்றே. பெண்களை வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பலர் அனுமதிப்பதில்லை. ஏனெனில் வீட்டு வேலை ஒடாதென்பதற்காக. ஆனால் பல பெண்கள் வீட்டு வேலையையும் வெளிவேலையை செய்கின்றனர். ஆண்களுக்கு இல்லாத விசேட உறுப்பை பெண்களுக்கு கடவுள் படைத்துள்ளார். பெண்களுடைய திறமையை அறிந்து கடவுளே மேலதிக உறுப்பை படைக்கும் போது நம்மோடு வாழும் ஆண்கள் இவற்றை உணராது இருப்பது கவலைக்கிடமே.
கேள்வி - பெண்கள் விடயம் தொடர்பில் அதிகம் கரிசனை கொண்டுள்ள நீங்கள் மூன்றாம் பாலித்தவர்கள் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?
பதில் - மூன்றாம் பாலினத்தவர்களை எப்போதுமே எமது சமுதாயம் சாபமாகவும் கேலிப்பொருளாகவும் பார்க்கின்ற நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்கள் எம்மைப் போன்ற எம்மையும் விட திறமையானவர்கள் உள்ளனர். ஆகவே அவர்களுக்குரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும்.
கேள்வி - தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் ஒருபுறம் அபிவிருத்தி அரசியல் கட்சிகள் ஒருபுறம் இருக்க வடக்கை பொறுத்தவரை அபிவிருத்தி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
பதில் - அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் என்ற ஒன்றே இல்லை. அரசியல் என்பது பல விடயங்களை உட்படுத்திய கட்டமைப்பு ஆகும்.
தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் தற்போது அபிவிருத்தியை தவிர்த்து செல்வதற்கு தயங்குகின்றன. தேர்தல் விஞ்ஞாபனங்களை அபிவிருத்தி விடயங்களை உள்ளடக்கியதாகவே வெளியிடுகின்றன. நாங்கள் ஆரம்பத்தில் கூறிய விடயங்களை தமிழ் தேசிய கட்சிகள் தற்போது புரிந்து கொண்டுள்ளன. இது ஒரு நல்ல மாற்றம்.
அடிப்படை தேவைகளே இங்கு பல இடங்களில் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த நிலையில் முதல் ஐந்து வருடங்கள் அடிப்படை பிரச்சனைகளை சீர் செய்வதுடன் அடுத்த ஐந்து வருடங்களில் அபிவிருத்தி தொடர்பில் சிந்தித்து செயல்பட முடியும்.
கேள்வி - நீங்கள் இம்முறை நாடாளுமன்றுக்கு தெரிவானால் எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பீர்கள்?
பதில் - பல வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்படாமலேயே காணப்படுகின்றன. இந்த நிலையில் அவற்றை செய்து முடிப்பது அவசியம். நான் நாடாளுமன்றுக்கு தெரிவானால் நாட்டையே மாற்றுவேன் என்று கூறுவது நல்ல நகைச்சுவையாகவே இருக்கும். ஆனால் என்னால் முடிந்த அளவு விடயங்களை செய்வேன்.எங்களுடைய முதன்மை வேட்பாளரின் " என் கனவு யாழ்" என்பது தேர்தல் வாக்குறுதி அல்ல. அது ஒரு திட்டம்.
கல்வி , வீடு,உணவு, நீர், மின்சாரம், வீதி போன்ற அடிப்படை விடயங்களுக்கு தீர்வு காண வேண்டும். அடிப்படை தேவைகள் என்பது அடுத்த ஐந்து வருடங்களிற்கு பின் இருக்ககூடாது என்பது என்னுடைய இலக்கு. போதைப்பொருளை அழிக்க வேண்டும்.
கேள்வி - காணாமலாக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?
பதில் - காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து குறைந்தது ஒரு குடும்பத்திற்கு 20 இலட்சம் பணமாவது வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய குடும்ப நிலை, வருமானம் என்பவற்றை கருத்திற்கொண்டு இது அவசியம் செய்ய வேண்டும்.அவர்களுடைய குடும்பத்தினருடைய தொழில் முயற்சிக்கு ஏதாவது வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி - உங்களுடைய கட்சி முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் ஒருபோதும் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உங்களுக்கு தேசிய பட்டியல் கிடைத்தால் நாடாளுமன்றம் செல்வீர்களா?
பதில் - தேசிய பட்டியல் தெரிவு என்பது கட்சி ரீதியான ஒர் விடயம். நான் ஒரு ஆளுமையானவள் என கட்சி தீர்மானித்தால் நிச்சயம் அந்த வாய்ப்பை பயன்படுத்துவேன்.