கோத்தாவின் கொட்டத்தை அடக்க கூட்டமைப்புக்கு ஆணை தாருங்கள்..! தமிழ் மக்களிடம் கோருகிறார் முன்னாள் எம்.பி. சரவணபவன்..

ஆசிரியர் - Editor
கோத்தாவின் கொட்டத்தை அடக்க கூட்டமைப்புக்கு ஆணை தாருங்கள்..! தமிழ் மக்களிடம் கோருகிறார் முன்னாள் எம்.பி. சரவணபவன்..

வெள்ளை வான் கடத்தல்கள், சுட்டுக் கொலைகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்கள் என்று மீண்டும் இருண்ட யுகம் இந்த நாட்டில் தோன்றப் போகின்றது. 2006ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்கள் மூச்சுக்கூட விட முடியாதளவுக்கு அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். 

அந்த நிலைமையை மீண்டும் தோற்றுவிக்கவே கோத்தாபய முயல்கின்றார். கோத்தாபயவின் இந்தக் கொட்டத்தை வேரறுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மாத்திரமே முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

சங்கானைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நீங்கள் எப்படிப்பட்ட வாழ்வொன்றை எதிர்கொண்டீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

அந்த இருண்ட யுகம் உங்கள் மனக் கண்ணில் தெரிகின்றதா?எங்கள் இளையோர்களும், தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்களும் வீதி வீதியாக வகைதொகையின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரவு வேளைகளில், ஊரடங்கு நேரத்தில் எங்கள் பிள்ளைகளை கதறக் கதறக் கடத்திச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் அப்போது இயங்கிய ஒட்டுக் குழு 

இராணுவத்துடன் சேர்ந்து இவற்றைச் செய்தது. இவற்றைச் செய்தவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பித்து வாழலாம். உங்களிடமே அவர்கள் மீண்டும் வாக்குக் கேட்டு வரலாம். அந்தத் துரோகிகளால், கொலைகாரர்களால் நீங்கள் அனுபவித்த நரக வேதனையை மறந்து விட்டீர்களா?

அன்றைய காலத்தில் பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபயதான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக அரியணை ஏறியிருக்கின்றார். அவருக்கு ஏவலாளியாகச் செயற்படும் அங்கஜன் போன்றவர்கள் இன்று மக்கள் முன் நல்லபிள்ளையாக வேசமிட்டு உங்கள் முன் வந்துள்ளார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது, கோத்தாபய வந்தால் மீண்டும் 

வெள்ளைவான் வரும் என்று கூட்டமைப்புச் சொன்னது. அப்படி ஒன்றும் நடக்கவில்லையே என்று இப்போது அவர் பரப்புரை செய்கின்றார்.மக்களே சிந்தித்துப் பாருங்கள்! நாடு இராணுவமயமாகிக் கொண்டு போவதை உங்களால் உணர முடியவில்லையா? நீங்கள் அனுபவித்த சுதந்திரங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோவதை உங்களால் 

கண்டுகொள்ள முடியவில்லையா? ராஜபக்சக்களின் கைகளுக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் போகாமலேயே அவர்கள் இந்தளவு தூரம் ஆட்டம் போடுகின்றார்கள் என்றால், அவர்களின் கைக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்து விட்டால் நிலைமை என்னவாகும்?2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 

யாழ்ப்பாண மண்ணில் இருக்காது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்த அங்கஜன் போன்றோருக்கு வெள்ளை வான் அட்டூழியங்கள் பற்றித் தெரியாது. இன்றும் வெள்ளை வான் என்று சொன்னாலே பயத்தில் முதுகு கூசும் அளவுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் மக்கள்.மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உச்சம் பெற்றிருந்த அடக்குமுறைகளை இல்லாதொழித்து, 

தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்கான வெளியை யார் உருவாக்கித் தந்தார்கள்? சர்வதேசத்தின் ஆதரவுடன் அதனைச் செயற்படுத்தியது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரேதான். இப்போதும் சர்வதேச சமூகம் கூட்டமைப்புடன்தான் இருக்கின்றது. தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் வெளிநாடுகளின் தூதுவராலயங்கள் கூட்டமைப்பை அணுகித்தான் 

விடயங்களைக் கேட்கின்றார்கள். அப்படிப்பட்ட கூட்டமைப்பால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், ராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்க முடியும். கோத்தாபயவை எதிர்க்கத் துணிவில்லாமல் ஓடி ஒளித்தவர்களால் இவற்றைச் செய்ய முடியாது. இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு கூட்டமைப்புக்கே மக்கள் ஆணை வழங்கவேண்டும், என்றார்.