SuperTopAds

உரிமை நிச்சயம் தேவை..! அதற்காக நிகழ்கால தேவைகளை மூட்டைகட்டி வைப்பதா..? இருள்மயமான பழைய சிந்தனைகள் மாற்றத்தை உருவாக்காது..

ஆசிரியர் - Editor I

72 வருடங்கள் செய்யாததை 5 வருடங்களில் செய்யலாம். உரிமை அவசியமானதுதான் ஆனால் இப்போது எதுவேண்டும். என சிந்தியுங்கள், தீர்மானியுங்கள் அதற்காக வாக்களியுங்கள். என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் திருமதி பவதாரணி ராஜசிங்கம் கூறியுள்ளார். 

யாழ்.அல்லாரை கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், உரிமை நிச்சயமாக தேவை. அதற்காக நிகழ்கால தேவைகளை மூட்டைகட்டி வைப்பதா?

72 வருடங்களில் நாங்கள் அடைய முடியாதவற்றை 5 வருடங்களில் அடையலாம். யாழ்.மாவட்டம் 1970 களில் விவசாயம்சார் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டியிருந்தது. ஆனால் அந்த நிலை இப்போதில்லை. அதனை மீண்டும் பழைய நிலைக்கு நாமே கொண்டுவரவேண்டும்.

அதற்காக நீங்கள் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் பாவம் மக்கள் இன்னும் அடைப்படை வசதிகள் கூட இல்லாமல், அடிப்படை தேவைகள் கூட நிவர்த்திக்கப்படாமல் இருக்கின்றார். 

அடுத்துவரும் சில நாட்களில் எதிர்வரும் 5 வருடங்கள் அல்லது நமது ஆயுள் முழுவதையும் மாற்றியமைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதுதான் மக்களுக்கான சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தில் சரியான சிந்தனையுடன், சரியானவர்களுக்கு வாக்களிக்கவேண்டும். 

தவறினால் அதன் விளைவுகளை சுமக்கவேண்டியவர்களாக மக்களே மாறுகின்றனர். இதுவரை அடைய முடியாதவற்றை, இதுவரை நிகழாத மாற்றத்தை எப்படி அடைய முடியும் என சிந்தியுங்கள். இருள்மயமான பழைய சிந்தனைகள் மாற்றத்தை உண்டாக்காது என்றார். 

இதேவேளை அல்லாரை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் இன்று திருமதி பவதாரணியை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அவர்களுக்கு பதிலளித்த அவர் தன் இயலுமைக்கு மேல் சென்று அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பேன் என உத்தரவாதமளித்தார்.