நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்!
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.
தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.