ஒவ்வொரு நாளும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிப்போம்!! -அறிவித்தது இந்திய மருந்து நிறுவனம்-
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை, தினமும் 7 கோடி ‘டோஸ்’ அளவில் தயாரிப்போம் என இந்திய மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அறிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தியாவில் இந்த மருந்தை உருவாக்க இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:-
நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசியை வழங்குவதில்தான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.
ஆரம்ப மற்றும் உரிம சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.
அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்மூலம் எங்கள் நிறுவனம், 100 கோடி டோஸ்களை இந்தியாவுக்காகவும், 70 குறைந்த, மத்திய வருமானநாடுகளுக்காகவும் தயாரிக்க முடியும்.
தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும் என்றார்.