அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தை மூட அதிரடி உத்தரவு!! -அவசர அவசரமாக ஆவணங்களை எரித்த சீன அதிகாரிகள்-
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீன தூதரகத்தை மூடவுதற்கான அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சில முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தூதரக அதிகாரிகளால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூஸ்டனில் உள்ள சீனத் துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. சீனா அறிவுசார் உடைமைகளை திருடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
ஆனால் இது மூர்க்கத்தனமானது மற்றும் நியாயமற்றது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சில காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது.ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் வர்த்தகம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக சீனாவுடன் பலமுறை மோதிக்கொண்டதுடன், ஹாங்காங்கில் சீனா விதித்துள்ள சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் எதிர்த்து வருகிறது.
இதனிடையே, செவ்வாயன்று, கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வகங்களை குறிவைத்து ஹேக்கர்களுக்கு சீனா நிதியுதவி அளிப்பதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது.
மேலும், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களை உளவு பார்த்ததாகவும், மற்ற திருட்டுகளுக்கு அரசு முகவர்களிடமிருந்து உதவி பெற்றதாகவும் கூறப்படும் இரண்டு சீனர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.