மக்கள் முன் வரமுடியாத நிலையில் கூட்டமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று மக்கள் மத்தியில் வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி – கலிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
சிவாஜிலிங்கம் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் பிரச்சனை. இவர்கள் வெளியில் சென்றால், கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து எதனைப் பெற்றுக்கொடுத்தீர்கள் என மக்கள் கேள்வி கேட்பார்கள்.
முன்னாள் பிரதமர் ரணிலுடனும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் சேர்ந்து திரிந்தார்கள். மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்தார்கள்? ரணிலும், மைத்திரியும் கையில் இருக்கும் போது, உங்கள் மடியில் சாவி இருக்கும் போது செய்ய முடியாததை இப்பொழுது செய்வதற்காக மஹிந்தவிடம் பட்டியலைக் கொடுக்கின்றார்கள்.
உங்கள் சுத்துமாத்துக்கள் இப்பொழுது மக்கள் முன் வரமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. உங்களால் மக்கள் சந்திப்புக்களை நடத்த முடியாதுள்ளது. ஓகஸ்ட் 5 ஆம் திகதி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டது என்ற செய்தி வரும் போது தான் இவர்கள் அதை உணர்வார்கள்’ என்றார்.