SuperTopAds

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியர் - Editor IV
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 சந்தேக நபர்களை  மீண்டும் ஜுலை 27  ஆம் திகதி வரை  விளக்கமறியலில்  வைக்குமாறு  கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  செவ்வாய்க்கிழமை (23)  அன்று அம்பாறை மாவட்டம்  கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது  வீடியோ கன்பிரன்ஸ்(காணொளி) ஊடாக சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த 6 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் ஜுலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்   வைக்குமாறு உத்தரவிட்டார்.

 குறித்த விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால்   தாக்கல் செய்யப்பட்டு  மீண்டும் சந்தேகநபர்கள்   விசாரணைக்காக மீண்டும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம்  மேற்குறித்த  6 சந்தேக நபர்களுடன்  கைதான ஏனைய சந்தேக நபர்கள்  அண்மையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம்   உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இவ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்  பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும்  அவரது அம்பாறை- அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று  (13) அதிகாலை கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த நிலையில் தற்போது அம்பாறை பொலிஸ் தலைமையக வாகன கராச் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.

இவர் சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் புலத்தினி  உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட சடலத்தில் மேற்கொண்ட டி.என்.ஏ. மரபணு பரிசோதனையில்  பொருந்தவில்லை என்ற நிலையில் அவர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுவந்த  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவரது சிறிய தந்தையாரை  கைது செய்த நிலையில் அவ்விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த பொலிஸ் பரிசோதகர் கைதானார்.