கல்முனை குருந்தையடி தொடர்மாடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் கல்முனை குருந்தையடி தொடர்மாடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 தினங்களாக சுமார் 250க்கும் அதிகமான குடும்பங்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த நீர் மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையினால் நிர்க்கதியாகி காணப்பட்டனர்.
பல தரப்பினரிடையே இப்பிரச்சினை தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனை அடுத்து தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனிடம் அம்மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கமைய சுமார் 68 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று (13) வாங்கப்பட்டு அனைத்து பூர்வாங்க வேலைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் நீர் மின் பிறப்பாக்கி இயக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த வேலைத்திட்டத்தை அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் சுதாகரன் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பலவருட காலமாக குடிநீரின்றி காணப்பட்ட அக்கரைப்பற்று கவடாப்பிட்டி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணா அம்மானின் நேரடி கண்காணிப்பின் கீழ் அங்குள்ள சுமார் 200 குடும்பங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூபா இரண்டு இலட்சம்(200,000) செலவில் அங்குள்ள மக்களின் பாவனைக்காக குழாய்க் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீர் தாங்கி இயந்திரம் மூலம் குடிநீரை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.