சஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க வந்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு-ஊடகங்களுக்கு மறுப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்விசாரணை நடவடிக்கையின் போது சனிக்கிழமை காலை முதல் மாலை வரையான காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் குழுவினர் தங்கி இருந்த வீடுகள் மற்றும் தாக்குதல் மேற்கொண்டு கொல்லப்பட்ட இடங்கள் என்பவற்றிற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அவ்வாணைக்குழு உறுப்பினர்கள் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு வருகைதந்த குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நிந்தவூர் மற்றும் இறுதியாக தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருந்த சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீட்டினையும் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாசிமின் குழு தங்கிருந்த வாடகை வீடுகள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த மற்றும் தற்கொலைத் தொக்குதலை மேற்கொண்ட பிரதேசங்களுக்கும் இக்குழு சென்று பார்வையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இவர்களின் வருகையை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர்.
அத்துடன் சஹ்ரானின் சகோதரர் மற்றும் ஏனைய உறவினர்கள் தங்கிருந்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற சாய்ந்தமருது வீட்டின் அருனே செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளரின் புகைப்படங்கள் பலவந்தமாக அழிக்கச்செய்யும் முயற்சிகளையும் அப்பகுதியில் நின்ற பாதுகாப்பு தரப்பினர் முயற்சி செய்தனர்.