ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்திப் பூங்காவை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த மோடி!
ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் சுமார் 1590 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த சோலார் மின் உற்பத்தியை இன்று (வெள்ளிக்கிழமை) காணொளிகாட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மோடி, “சூரிய ஒளிமின்சாரமானது தற்கால மின்சாரத் தேவைக்கு மட்டுமானது அல்ல. 21ம் நூற்றாண்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவும் அது அவசியம்.
சூரிய ஒளி மின்சார நிலையானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது. ரேவாவில் அர்ப்பணிப்பு செய்யப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி அமைப்பின் மூலம் மத்திய பிரதேசத்தின் தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின்சாரம் அளிக்கப்படுவதோடு இல்லாமல், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மின்சாரம் அளிக்கப்படும்.
ரேவாவை போன்று மத்திய பிரதேசத்தின் சாஜாபூர், நீமுச், சத்தார்பூர் ஆகிய இடங்களிலும் சூரிய ஒளி மின்உற்பத்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்திப் பூங்கா மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மோடி திறந்துவைக்கவுள்ளார். இந்நத பூங்காவை, காணொளி தொடர்பாடல் மூலம் டெல்லியில் இருந்தபடி அவர் இன்று திறந்துவைக்கவுள்ளார்.
மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் மத்திய அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அந்தவகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 175 ஜிகாவொட்ஸ் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவொட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.