இந்தியா - சீனா எல்லை விவகாரம்: பின்வாங்கிய சீன படைகள்!

ஆசிரியர் - Admin
இந்தியா - சீனா எல்லை விவகாரம்: பின்வாங்கிய சீன படைகள்!

லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய- சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் அதன் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இதை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இந்திய எல்லையை ஒட்டி சீனா முகாம்களையும், ஹெலிபேடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைத்தது. பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை எல்லை நோக்கி நகர்த்தியது.

லடாக் அருகே உள்ள விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன.

மேலும், ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்நிலையில், கல்வான் பகுதியில் அமைந்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மற்றும் கூடாரங்களை சீன இராணுவம் அகற்றி இருக்கிறது. கடந்த 6 ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் சீன கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சீனாவை போல இந்தியாவும் எல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்திற்கு படைகளை விலக்கி உள்ளது.

இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டிருப்பதால் லடாக் எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த பதற்ற நிலை, தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் லடாக் எல்லையை 24 மணி நேரமும் இந்திய இராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.