கருணாவுடன் இணைந்த முன்னாள் எம்.பி குணசேகரம் சங்கர்
ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணா அம்மானுடன் இணைந்துள்ளேன்.கருணா அம்மானின் வெற்றியையும் உறுதிப்படுத்தினார்.
தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(7) இடம்பெற்றது.
இவ்வாறு இணைந்த பின்னர் அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் எம்பி குணசேகரம் சங்கர் கருத்து தெரிவிக்கையில்
அம்பாறை மாவட்டத்தில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அம் மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன். நானும் கடந்த காலங்களில் ஒரு போராளியாக இருந்தவன். எமது தமிழ்மக்கள் படும் இன்னல்களை துன்பங்களை அறிவேன்.எமது மக்கள் கடந்த காலங்களில் பல சூழ்நிலைகளில் பாரபட்சங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்தவர்கள் ஆவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் எந்தவொரு உருப்படியான வேலைகளையும் இதுவரை செய்யவில்லை. மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கி தொடர்ச்சியாக ஏமாற்றியே வந்துள்ளனர். போலி தேசியம் பேசிக்கொண்டு எத்தனை நாட்களுக்கு எமது மக்களை ஏமாற்றமுடியும். காணி அபகரிப்புகள் நிலப்பறிப்புகளை இன்றும் எம்மக்கள் சந்திக்கிறார்கள்.
நான் எம்.பியாக இருந்தகாலத்தில் என்ன செய்தேன் என்பதை எமது மக்கள் அறிவார்கள். அது தொழில்வாய்ப்பாக இருந்தாலும் சரி நாவிதன்வெளி பிரதேசசெயலக உருவாக்கமாக இருந்தாலும் சரி என்னால் முடிந்தவைகளை பல நிறைவேற்றி உள்ளேன்.
எங்களுக்கு பின்னால் வந்த சிலர் சர்வதேசம் தேசியம் பேசி இன்று வரை வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடைசிநேரத்தில் சாராயத்தையும் அரிசியையும் வழங்கி ஏமாற்றலாமென்று நினைக்கின்றனர்.ஆனால் இம்முறை கடைசி வரைக்கும் நடக்காது என்று நினைக்கின்றேன்.
இன்றைய சமகால அம்பாறை மாவட்ட சூழலில் அம்பாறைத் தமிழ்மக்களை மீட்கக்கூடிய ஒரே வல்லமை கருணா அம்மானுக்கு மட்டுமே உள்ளது. மேலும் தமிழ்மக்களின் அபிலாசகைளை வென்றெடுக்கக்கூடிய திராணியும் சக்தியும் அவரிடமே உள்ளது.
அதனால்தான் இன்னும் ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணா அம்மானுடன் இணைந்துள்ளேன்.
எமது அம்பாறை மாவட்டம் எங்கும் கருணா அலை பலமாக வீசுகிறது. எங்குபார்த்தாலும் கருணா அம்மானின் கதைதான். எனவே இம்முறை கருணா வெல்வது நூற்றுக்குநூறு உறுதியாகிவிட்டது.எமது இளைஞர்களும் மக்களும் ஓரணியில் திரண்டுவிட்டார்கள். புத்திஜீவிகளும் கல்விமான்களும் அதே கருத்திலுள்ளனர். இந்த மாற்றம் தமிழ்மக்களின் வளமான எதிர்காலத்திற்கு கட்டியம்கூறுவதாக அமைகிறது. எனவே அம்மானின் வெறறிக்கு வலது கரமாக உழைப்பேன் என்றார்