நிரூபித்துக் காட்டுங்கள் அடுத்த நிமிடமே தேர்தலில் இருந்து ஒதுங்குவேன்..! மக்களிடம் கூற வேறு ஒன்றுமில்லையா..? நகைக்கிறார் அங்கஜன்..
தமிழ் மக்களின் பொருளாதாரம், இருப்பு, உரிமை, கல்வி, அடிப்படைவசதிகள் மேம்பாட்டுக்காக நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன். மக்களுக்கு எதையும் செய்யாத, செய்ய முடியாத சிலர் என்னை பார்த்து அச்சப்படுகிறார்கள்.
நான் செய்தேன் என கூற நான் செய்த பணிகள் இருக்கிறது. ஆனால் நாங்கள் செய்தோம் என அவர்கள் கூறுவதில் பாதி வேறு யாரோ ஒருவர் செய்ததாகவும், அல்லது பலருடைய அழுத்தத்தினால் செய்யப்பட்டதாகவே இருக்கிறது.
மக்களுக்கு கூற அவர்களிடம் வேறு எதுவுமில்லை. மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட தலமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பொருளாதாரம், இருப்பு, கல்வி, உரிமை, அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு
இன்று எதுவுமற்ற நிலையே காணப்படுகின்றது. இவை மீள கட்டியெழுப்பபடவேண்டும். அபிவிருத்தி என்பது வீதி அபிவிருத்தி மட்டுமல்லாமல், பொருளாதார அபிவிருத்தி, அறிவுசார் மேன்மை, வாழ்க்கைதர மேன்மை, பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு
உள்ளிட்ட முழுமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் கொண்டிருக்கிறோம். அந்த வேலைத்திட்டம் என்ன என்பதை அடுத்தவாரம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவோம்.
மேலும் “நிறைவான கிராமம்” அபிவிருத்தி திட்டம் நான் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம். கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல தேவைகள் உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு கிராமங்களுக்கும்
50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 20 லட்சம் வீதம் வழங்கி வேலைத்திட்டங்களை செய்தோம். எனவே நான் செய்த வேலைத்திட்டத்தை நான் உரிமைகோருவதில் தவறென்ன? இப்போது கம்பரெலிய திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உரிமைகோருகிறது.
கம்பரெலிய திட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணத்தில் செய்யப்பட்டதா? அதுவும் அரசின் திட்டம். அதேபோல் அரசின் திட்டத்தை எமது பகுதியில் திறம்பட செய்து முடித்தேன். அதேபோல் அல்லது அதைவிடவும் மேலாக
எதிர்காலத்தில் செய்வேன். அதையே மக்களிடமும் கூறியிருக்கிறேன். இது 5 மாதங்களில் நான் செய்தது. இதைவிட விவசாய பிரதி அமைச்சராக இருந்தபோது பல வேலைத்திட்டங்களை செய்தேன். இன்னும் செய்வேன். அதை மக்களிடம் சொல்கிறேன்.
இத்தனை விடயங்களையும் ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு செய்தேன். இதைவிடவும் வேகமாக மக்கள் பிரதிநியாக செல்லும்போது செய்வேன். எமக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. அதனை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
என்னை பார்த்து அச்சப்படுகிறார்கள்.மேலும் காணி விடுவிப்பு தொடர்பாக இன்று பலர் உரிமைகோருகிறார்கள். “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியை காண்பித்தார்” அதில் அவர் தாமே பெருமளவு காணிகளை விடுவித்தேன்
எனவும், ஒருவர் செய்த வேலையை இன்னொருவர் தான் செய்ததாக கூறுவதுஅரசியலில் சாதாரண விடயம் எனவும், வடக்கில் பல காணிகளை விடுவித்திருக்கலாம். ஆனால் மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்டோரினால் அதனை செய்ய முடியவில்லை.
அது என்னுடைய தவறு அல்ல என கூறியிருக்கின்றார். இந்த வீடியோ பதிவில் உள்ளதே நடக்கிறது. நானும் உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் நாங்களும் கூட மக்களின் காணிகளை கொடுங்கள் என அழுத்தம் கொடுத்தோம்.
வேறு பலரும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் நிறைவேற்றியது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறேனா, இந்த உண்மையை மறைத்து மக்களிடம் கூறுவதற்கு எதுவுமில்லாதவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக மற்றவர்கள் செய்தவற்றையும்
தாங்கள் செய்தாக கூறுகிறார்கள். மறுபக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நான் மொட்டு கட்சியின் முகவர் என கூறுகிறார். நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுகிறேன். அது அவருக்கு தொியாதா?
மேலும் சட்டத்தரணி சுகாஸ் கூறுகிறார் அங்கஜன் இராமநாதனுக்கு முப்படையினரும் வேலை செய்வதாக அப்படி அவர்களின் வேலையை பெறவேண்டிய தேவை எனக்கில்லை. இவர்களுடைய கடந்தகாலத்தை பார்க்கிறபோது இவர்கள் மற்றவர்களை
குற்றஞ்சாட்டியே மக்கள் ஆணை பெறலாம் என நினைக்கிறார்கள்.நான் பகிரங்க சவால் விடுகிறேன். எனக்காக முப்படையினர் தேர்தல் வேலை செய்வதை நிரூபித்துக் காட்டுங்கள் நான் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.
நிரூபிக்க முடியாவிட்டால் ஒதுங்க நீங்கள் தயரா? மற்றவர்களை போல் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டே இருக்கும் அரசியலை நான் விரும்புவதில்லை. நாம் எம்முடைய பணிகளை செவ்வனே செய்வோம்.
தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி மக்களின் பொருளாதாரம், உரிமை, இருப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்தல், கல்வி மேம்பாடு போன்ற விடயங்களில் உத்வேகத்துடன் செயலாற்றுவோம் என்றார்.