SuperTopAds

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்வுக்கு தடை!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்வுக்கு தடை!

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நினைவு நாள் நிகழ்வுக்குப் பொலிசார் தடைவிதித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபையினால் இன்று அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, நினைவு கூரும் நிகழ்வுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த நிகழ்வை இன்று நடத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.

இன்று, கரும்புலிகள் நாள் என்பதால், அக்கராஜ மன்னனின் நினைவு நாள் நிகழ்வை நடத்துவதற்கும் அனுமதிக்க முடியாது என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இதனால், பொலிசாருக்கும், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நீண்ட நேரம் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இது தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவிக்கையில், அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு அக்கராஜ மன்னனின் சிலை இதே நாளில் திறந்து வைக்கப்பட்டது என்றும், பிரதேச சபையின் மன்னர்களை வருடம் தோறும் நினைவு கூரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

எனினும், நிகழ்வு இடம்பெற இருந்த இடத்திற்கு வருகை தந்த, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இந்த விழாவை தடுத்து நிறுத்தினர் என்றும், நீதிமன்ற தடை உத்தரவையோ அல்லது பொலிஸ் அதிகாரத்தின் அடிப்படையில் எழுத்து மூலமான தடை உத்தரவு மூலமோ இதனை தடுத்து நிறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அக்கராஜ மன்னனின் நிகழ்வை, பயங்கரவாத செயற்பாடு போன்று அடையாளம் காட்டுவது போன்று பொலிசார் மற்றும் இராணுவத்தினர் நடந்து கொண்டதாகவும், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.