இயக்கச்சியில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கரும்புலிகள் நாள் சுவரொட்டி, உள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம்..! குடும்பம் கைது..

ஆசிரியர் - Editor
இயக்கச்சியில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கரும்புலிகள் நாள் சுவரொட்டி, உள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம்..! குடும்பம் கைது..

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்தவருடைய வீட்டிலிருந்து கரும்புலிகள் நாள் சுவராட்டிகள்,  2 உள்ளுர் தயாரிப்பு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் இயக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்ட நிலையில் அங்கு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வெடிப்பு சம்பவம் பெற்றோல் போத்தலில் நெருப்பு பற்றியதால் இடம்பெற்றதாக கூறப்பட்டது. ஆனாலும் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வெடிமருந்து

உள்ளிட்ட சில பொருட்கள் அன்றே மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் வீட்டிலிருந்த 3 பெண்களும், பளை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதுடன், 

காயமடைந்தவரின் மனைவி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் குறித்த நபரின் வீட்டிலிருந்து மடிகணனி, கமரா, இரு நாட்டு வெடிகுண்டுகள், பற்றரிகள், வயர்கள், குழாய்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கரும்புலிகள் நாள் சுவரொட்டி ஆகியனவும் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.