அம்பாறையில் அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் தபால் திணைக்களத்திற்கு இன்று ஒப்படைப்பு
பொதுத் தேர்தல் 2020 இற்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்யப்பட்டு அஞ்சல் வாக்களிக்கும் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ,அம்பாறை தேர்தல் தொகுதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த அரச அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் விண்ணப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை காப்புறுதி செய்யப்பட்ட தபால்பொதி மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பமானது
இதன் போது கல்முனை பிரதம தபால் நிலையத்தில் இருந்து இவ்வாக்குச் சீட்டுக்களை பொதி செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது. இதேவேளை தபால் வாக்குச் சீட்டுக்களை பொதி செய்யும் நடவடிக்கையில் தபால் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொதி செய்யப்பட்ட வாக்குச் சீட்டுக்களை காப்புறுதி செய்யப்பட்ட தபால் பொதி மூலம் அஞ்சல் வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கல்முனை பிரதம தபால் அதிபர் மேற்பார்வையில் தபால் பணிக்குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பொதுத் தேர்தல் 2020 இற்கான தபால் வாக்களிப்பு நடைபெறும் தினங்களாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 15 ஆந் திகதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.