கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு- தப்பவே முடியாது என்கிறார் சம்பந்தன்!

ஆசிரியர் - Admin
அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு- தப்பவே முடியாது என்கிறார் சம்பந்தன்!

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர். இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு, அவர்கள் தப்பவே முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை புலிகளே கொன்றனர். கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர். அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும். காணாமல் போனவர்கள் என கூறும் நபர்கள் அந்த பட்டியலில் இருக்கலாம்.

சரணடைந்த நபர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் காணாமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும்.” என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் வழங்கும் முகமாகவே இரா சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ இறுதிப் போரில் இராணுவத்தினரை களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரே தற்போது ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக உள்ளார். அவருக்கு அங்கு நடந்த உண்மை நிலவரம் தெரியும். எனவே அவர் உண்மையை வெளியிட வேண்டும். அதை விடுத்து விடுதலைப்புலிகள் மீது பழி போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது.

இறுதிப்போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக ஐ.நாவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் அமெரிக்காவுக்குள் நுழையக்கூட அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இறுதிப்போர் தொடர்பிலும், சரணடைந்தவர்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்தை நம்ப முடியாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Radio
×