கொரோனாவை விட கொடிய வைரஸ்!! -இந்தியாவில் பரவல்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை-
இந்தியாவில் கொரோனாவை விட மோசமான பாதிப்புக்களை கொடிய வைரஸ் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் கொரோனா வைரசை விட அதிக கொடியதான நிஃபா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என கூறப்படுகிறது.
வைரல் பதிவுகளுடன் தி நியூ யார்க் டைம்ஸ் செய்தி தொகுப்பு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி தொகுப்பில் 'நிஃபா வைரஸ், மிகவும் அரிதான மற்றும் கொடிய நோய் அது இந்தியாவில் பரவுகிறது' எனும் தலைப்பு கொண்டுள்ளது.
இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவுகிறதா என ஆய்வு செய்ததில், இந்த தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. கடைசியாக ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவல் பற்றி உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வைரலாகும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி ஜூன் 4, 2018 அன்று பதிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிஃபா வைரஸ் தொற்று பரவும் பட்சத்தில் அதனால் உயிரிழப்போர் விகிதம் 40 முதல் 75 சதவீதம் ஆகும்.
எனினும், தற்சமயம் இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகி விட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.