ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது-கருணா அம்மான்
யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இது போன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது. அரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம் என தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் தான் தெரிவித்த தேர்தல் பிரசார கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்கிய பின்னர் மீண்டும் தனது பிரசார பணியினை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சனிக்கிழமை(27) அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
தற்போது அரசியலுக்காக திரிவடைந்துள்ள ஒரு பிரச்சாரமாக தான் எனக்கெதிராக அண்மைக்காலமாக பலர் தெரிவிக்கின்ற கூவல்களை பார்க்கின்றேன் . அரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம்.
யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இது போன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது.
சஜித் பிரேமதாச போன்றவர்கள் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக மாற்றி அதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை தாக்க வேண்டும் என்பதற்காக திரிவுபடுத்தி அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
இது தொடர்பான விளக்கங்களை குற்றப்புலனாய்வு இருக்கு நான் கொடுத்து இருக்கின்றேன். இந்த விடயத்திற்கான விளக்கத்தினை நமது பிரதமர் மகிந்த ராஜபக்ச தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.
இந்த விடயத்தை பொறுத்தளவில் தமிழ் தரப்பில் இதனை பெரிதாக எடுத்துக் கூறி இருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது அதை காப்பாற்ற முற்படாமல் காட்டிக்கொடுக்கும் கும்பலாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. இதில் குறிப்பாக கோடீஸ்வரன் செல்வம் அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம் போன்றவர்கள்தான் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
இத்தனைக்கும் தமிழர்களுக்கான தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் என விடுதலைப்புலிகளின் மேடையில் நின்று பேசிய பேச்சுகள் என்னிடம் இருக்கின்றது மனோ கணேசன் வவுனியாவில் வைத்து பேசிய பேச்சு சம்பந்தன் ஐயா விடுதலைப்புலிகளின் பொங்கு தமிழ் முதல் மேடையில் பேசிய பேச்சு ஆகியவை என்னிடம் உள்ளது இவற்றையெல்லாம் நான் கொடுத்தால் இன்று அவர்களை நேரடியாக கைது செய்வார்கள்.
போராட்ட காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது அவர்களின் இரத்தம் இன்னும் மாறவில்லை இன்று எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவர்களின் காட்டிக்கொடுக்கும் எண்ணம் வெளிபட்டு வருகின்றது.
தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா கூட என்னை கைது செய்ய வேண்டும் அத்துடன் தமிழ் தலைவர்கள் தன்னிடம் (அதாவுல்லாவிடம்) அரசியல் கற்றுக்கொள்ள பைல்களை தூக்க வேண்டும் என பேசியிருந்தார். கேவலமான முறையில் தமிழ் தலைமைகளை விமர்சிக்கும் அளவிற்கு அதாவுல்லாவிற்கு அருகதை இல்லை.
அது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளாக இருக்கலாம் அல்லது வேறு தமிழ் தலைமைகளாக இருக்கலாம் இது போன்ற அரசியல்வாதிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முறையில் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்.
நாங்கள் வெற்றி பெற்று அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம். மேலும் கடந்த சில தினங்களாக சம்பந்தன் ஐயா கனவுதான் காண்கின்றார் ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வடகிழக்கில் தமிழ் மக்கள் தூக்கி வீசியுள்ளனர் என்றார்.