சீனாக்கு தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார்!! -வீரர்களின் தியாகம் வீணாகாது: இந்திய தளபதி ஆவேசம்-
இந்தியா இராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கூறி உள்ளார்.
ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடந்த ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:-
மிகவும் சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளன.
எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.
நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு உள்ளது.
இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று கூறினார்.