SuperTopAds

தமிழக இராணுவ வீரர் பழனியின் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்!!

ஆசிரியர் - Editor III
தமிழக இராணுவ வீரர் பழனியின் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்!!

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

லடாக் பகுதியில் நடந்த இந்தியா - சீனா மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் மதுரை மாவட்டம், கடுக்கலூரை சொந்த ஊராக கொண்ட பழனி என்ற வீரரும் வீர மரணம் அடைந்தார்.

வீரர் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் இரவு 11:20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இதை தொடர்ந்து, பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலில், தேசிய கொடி போர்த்தி, இராணுவ வீரர்கள் விமான நிலைய முகப்பில் கொண்டு வந்து வைத்தனர்.

இராணுவ வீரர் பழனியின் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கொண்டு வரப்பட்டது. கிராம எல்லையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரது உடல் இராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ஊர்வலமாக சொந்த கிராமமான கடுக்கலூர் கொண்டு வரப்பட்டது. 

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் பழனியின் உடல் இராணுவ மரியாதையுடன் கொண்டு வரப்பட்டது.

தேசியக் கொடி போர்த்திய பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் அறிவித்த 20 இலட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் குடும்பத்தாரிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து பழனியின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உயிர் தியாகம் செய்த பழனிக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழக வீரர் பழனியின் உடலுக்கு ஆட்சியர் வீர ராகவராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். தமிழக காவல் உயர் அதிகாரிகளும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.