SuperTopAds

நியூசிலாந்து தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்!

ஆசிரியர் - Admin
நியூசிலாந்து தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்!

நியூசிலாந்தில் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர், போட்டியிடவுள்ளார். நியூசிலாந்தில் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், வனுஷி வோல்ட்டேர்ஸ் என்ற தமிழ்ப் பெண்ணை வேட்பாளராக களமிறக்குவதற்கு தொழிற்கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஓக்லன்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார்.

நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட முகாமையாளராக பதவி வகிக்கும் வனுஷி வோல்ட்டேர்ஸ் , சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டியான, லூசியா சரவணமுத்து, 1931 ஆம் ஆண்டு கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து இலங்கை அரசுப் பேரவைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயராகப் பணியாற்றியிருந்தார் என்பதும், அவரது பெயரிலேயே சரவணமுத்து அரங்கு அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வனுஷி ஐந்து வயதாக இருந்த போது, அவரது தந்தை ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்து. அங்கேயே வாழ்ந்து வருகிறார். வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகளின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.