அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு ஆசனங்களை கைப்பற்றும்- தமிழ் வேட்பாளர் எஸ் .சாந்தலிங்கம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அம்பாரை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என பொதுஜன பெரமுன கட்சியின்திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தமிழ் வேட்பாளர் எஸ். சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இலக்கம் 10 இல் களமிறங்கிய இவர் விசேட செய்தியாளர் சந்திப்பை இன்று (17) மதியம் மேற்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
தமிழ் மக்கள் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல கட்சிகளின் பின்னால் சென்று சிதைந்து போயுள்ளனர். நாம் சிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக இருக்கும் சமூகமாக மாற வேண்டும் அதற்காக என்னை தமிழ் மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட வலியுறுத்தினர் அதனால் நான் பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடுகிறேன்.
மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எமது ஜனாதிபதி அவர்களை மிகவும் கேவலமாக வெள்ளை வேன் கடத்தல் கொலை செய்தும் முதலைக்கு போடுபவர் என கூறினார்கள். எனவே இவ்வாறான பல கேவலமான வார்த்தைகளை கூறி சேறு பூச முற்பட்டனர். அவர்களது வார்த்தைகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன.நான்கரை வருடம் ஆட்சியில் இருந்தவர்கள் ஏன் இதனை நிரூபிக்கவில்லை. அது அவர்களது போலி நாடகம் ஆகும்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஒட்டுண்ணி புல்லுருவி என விமர்சித்து விட்டுஅவர்கள் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தற்கு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்குவதாக குறிப்பிடுகின்றனர். இவர்களது கட்டு கதைகளை கேட்கும் நிலையில் அம்பாறை மாவட்ட தமிழர்கள் இல்லை ஏன் எனில் கடந்த 40 வருடமாக எந்த வித செயற்பாடும் இல்லாமையினால் மக்கள் மிக தெளிவாக இருக்கின்றனர் .எனவே ஆளும் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்கள் வெல்ல வேண்டும் என்ற கனவில் உள்ளனர் என்றார்.
--