SuperTopAds

டிரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா சேனை-மூவர் கைது

ஆசிரியர் - Editor IV
டிரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா சேனை-மூவர் கைது

டிரோன் கமராவின் மூலம்  அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும்  வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.

செவ்வாய்கிழமை(16)  அதிகாலை கிடைத்த தகவலின்   மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதிகளான  மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள்   சுற்றிவளைக்கப்பட்டன.

குறித்த சுற்றி வளைப்பினை  மொனராகலை, அம்பாறை ,  பண்டாரவளை ,மதுவரி திணைக்களத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சுமார்  20 பேர் கொண்ட குழு  ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை டிரோன் கமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு  சுற்றிவளைப்பு  மேற்கொள்ளப்பட்ட நிலையில்   3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் அருகில் இருந்த  இரு வேறு  இடங்களில் இருந்த மற்றைய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் தப்பி சென்றவர்களால்  பயிரிப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த  கஞ்சா செடிகள் பிடுங்கப்பட்டு தீ இட்டு  அழிக்கப்பட்டது.

சுமார்  2 ஏக்கருக்கு அதிகமான  ஐந்து கஞ்சா  சேனைகள்  அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றி வளைப்பு தொடர்பாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்ததாவது

அதிகாலை வேளை எங்களுக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில்  மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதியில்  மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகளை  சுற்றிவளைப்பு செய்தோம்.  மொனராகலை அம்பாறை   பண்டாரவளை மதுவரி திணைக்களத்திலிருந்தும்  20 பேர் கொண்ட குழாம் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது  3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் இரு இடங்களில் இருந்த சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர். வேளை அவர்களால் பயிரிப்பட்ட கஞ்சா செடிகள் எங்களால் அழிக்கப்பட்டது.

இன்று அதிகாலை முதல் மாலை 5 மணி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கால் ஏக்கர் ஐந்து  தோட்டங்கள் அழிக்கப்பட்டன.

இரண்டு அடி முதல் ஏழு அடி முதல் வளர்ந்த 10 ஆயிரம் கஞ்சா செடிகள் மண்ணில் இருந்து பிடுங்கி எடுப்பதற்கு சிரமத்தை எதிர்கொண்டோம்.10 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான செடிகள் சுற்றிவளைப்பின் மூலம் கண்டறிந்தோம். இந்த சுற்றிவளைப்பின் போது டிரோன் கமராவை பயன்படுத்தி இருந்தோம்.ஏற்கனவே ஒரு இடம் அடையாளப்படுத்ப்பட்ட நிலையில் ஏனைய இடங்களை ரோன் கமராவின் மூலம் கண்டறிந்தோம். அடர்ந்த காட்டிற்குள் யானை தொல்லைகளுக்கு  இந்நடவடிக்கையை மேற்கொண்டோம்.

இச்சுற்றிவளைப்பில் கைதான  சந்தேக நபர்கள் எமது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த படுவார்கள். கைதான  இவர்களில்  அதிகமானோர் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் இதன் உரிமையாளர்கள் தப்பித்து சென்றுள்ளனர். இவர்கள் களை பிடுங்குதல் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.

இவ்வாறான  சந்தேக நபர்களுக்கு  பல ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றோம் . மேலும்  கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் இவ்வாறான நடவடிக்கைகளுக்காக மூன்று தடவைகளுக்கு மேல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் தனது சீவனோபாயத்திற்காகவே குறித்த செயலை  செய்வதாக எம்மிடம்  குறிப்பிட்டுள்ளார் என்றார்.