படையினர், பொலிஸாரை இலக்குவைத்து அடுத்தடுத்து குண்டு தாக்குதல்..! யாழ்.பலாலியில் உயர்மட்ட கலந்துரையாடல், முக்கிய தளபதிகள் யாழ்.வருகை..
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் மற்றும் பொலிஸாரை இலக்குவைத்து நடாத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்.பலாலி இராணுவ தலமையகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள முச்சந்தியில் பொலிஸாரை இலக்கு வைத்து கடந்த மாதம் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பட்ட பொம்மை ஒன்றை வீசிச் சென்றமை, கிளி.கண்டாவளையில் மர்ம வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 3 வாரங்களில் இடம்பெற்றுள்ளன.
இவை தொடர்பில் ஆராய்ந்து பின்னணியில் இயங்குபவர்கள் தொடர்பில் உயர்மட்ட விசாரணையை நடத்துவதற்கு முப்படைகளின் தளபதிகள், கட்டளைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிறப்பு அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்கும் உயர்மட்ட மாநாடு பலாலி படைத் தலைமையகத்தில் நாளை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியாக கடந்த வாரம் பதவியேற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.