SuperTopAds

நடுக்கடலில் மாயமான படகு!! -இராமேஸ்வர மீனர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்-

ஆசிரியர் - Editor III
நடுக்கடலில் மாயமான படகு!! -இராமேஸ்வர மீனர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்-

கடந்த சனிக்கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 622 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர்,மலர்,ஆனந்த்,ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

வழக்கமாக மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடித்து விட்டு கரை திரும்பி இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கரை திரும்பாததால் விசைப்படகின் உரிமையாளர் மீன் வளத்தறை அதிகாரிகளிடம் படகு மீனவர்களுடன் மாயமானது குறித்து தகவல் தெரிவித்ததுடன் படகையும் மீனவர்கள் நால்வரையும் மீட்டு தரும்படி மனு அளித்தனர்.

இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர்.

ஆனால், இதுவரை மாயமான மீனவர் மற்றும் விசைப்படகுகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காததால் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு சொந்தமான சிறிய ரக ரோந்து கப்பல்கள் தேடி வருகின்றனர்.

இரவு நேரம் என்பதால் அவர்கள் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் தேடும் பணியை தீவிர படுத்துவதுடன், படகு இஞ்சின் கோளாறு காரணமாக இலங்கை கடற்பகுதிக்கு சென்றுள்ளனரா? என்பது குறித்து இலங்கை அரசிடம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மாயமான நான்கு மீனவர்களின் உறவினர்கள் மீன் வளத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா மற்றும் மீன் பிடி தடை காலம் என 83 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் நடுக்கடலில் படகுடன் மாயமான சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.