கணவனின் சேவையை தொடரவே அரசியலுக்கு வந்துள்ளேன்!
மாமனிதர் ரவிராஜின் இறப்புக்கு பின் சாவகச்சேரியில், அதாவது தென்மராட்சி தொகுதியில் கடந்த 14 வருடங்களாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. இதன்காரணமாகவும் – நானும் ஒரு பாதிக்கப்பட்ட பெண், பெண்களின் வலியையும் வேதனையையும் உனர்ந்தவர் என்ற வகையில் அவர்களுக்காகவும், எனது கணவர் செய்த சேவையை தொடர்வதற்கும் இந்த தேர்தலில் போட்டியிட வந்திருக்கின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எனது கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர். அவரது அப்பணியை விடுபட்ட இடத்திலிருந்து கொண்டு செல்லவே நான் விரும்புகிறேன்.
நான் அறிந்த வகையில் யாழ் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கானப்படுகின்றன. கடந்த காலத்தில் அவர்களுடைய எந்தவித தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. செய்யப்பட்டவையும் மிக குறைவே என்று சொல்லலாம்.
அவ்வாறான நிலையில் எனது முக்கிய நோக்கம் அவர்களுக்கும் பாதிக்கப்பட்ட எந்தவகையான குடும்பங்களுக்கும் அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் என்னைப் போல் பிரச்சனை இருந்தது. இருந்தாலும் பொருளாதார ரீதியாக நான் ஒரு நிரந்தர தொழிலை செய்தபடியால் எனக்கு பொருளாதாரப் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஆனால் இது எல்லாத்தையும் விட இங்கு உள்ள குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சமூகசீரழிவுகள் எல்லாவற்றையும் தொடர்ந்து ஒரு கட்டமைப்புக்குள் அவர்கள் சீவித்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக நான் எனது இந்த சந்தர்ப்பத்தை பிற்காலத்தில் பயன்படுத்துவேன். இது தவிர சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சார்பாகவும் எனது ஈடுபாடு காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதைத் தவிர எனது அனைத்து கட்சி அங்கத்தவர்களுடனும் நான் கூட்டாக சேர்ந்து செயற்படுவேன்.
எனது வெற்றிவாய்ப்பு சாதகமாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன். எனது கணவருடைய சேவையை அனைவரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். ரவிராஜ்ஜின் கொள்கைகள் சேவைகள் எவ்வாறு இருந்ததோ அதே பணியை நானும் தொடர விரும்புகின்றேன்.’ என்றார்.