சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா!! -பீஜிங்கில் அசாதாரண நிலை-
சீன தலைநகரான பீஜிங்கில் கடந்த ஒரு வாரமாக புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவது தொற்று நோயின் மீள் எழுச்சி குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
புதிய தொற்று நோயாளாhகள் அனைவரும் பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி என்ற ஒரு பெரிய மொத்த உணவுச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சோதனைகளை அதிகரிப்பது உட்பட தொற்று நோய் மேலும் தடுக்காமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜின்ஃபாடி சந்தைக்குச் சென்றவர்கள் அல்லது அங்கு சென்றவர்களுடன் தொடர்புடைய அனைவரும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் இருக்குமாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பீஜிங் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறானவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்திக் கொள்வதைக் கண்காணிக்கவும் சுகாதாரப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பீஜிங்கில் ஜூன் 12 அன்று புதிய தொற்று நோயாளர் கண்டறியப்படும்வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நகரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை. இப்போது அங்கு தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஐக் கடந்து அதிகரித்து வருகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளர்கள் அனைவருமே ஜின்ஃபாடி சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் அங்கு வந்து சென்றவர்களே என பீஜிங் நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பீஜிங் ஒரு அசாதாரண காலகட்டத்துக்குள் தற்போது நுழைந்துள்ளது" என நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.