இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்!! -தென்கொரியவை எச்சரிக்கும் வடகொரியா-
வட கொரியாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தென்கொரியாவில் நிறுத்தாவிட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
தென்கொரியாவிற்கு எதிராக இராணவத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனவும் அவர் கூறிவைத்துள்ளார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர்களில் ஒருவராக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றும் கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையை வட கொரிய அரசின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தலைவர் கட்சி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனது அதிகாரத்தின் கீழ் தீர்க்கமான அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராக இருக்குமாறு பொறுப்பான துறைகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
தொன் கொரியாவின் செயற்பாடுகளால் தாம் கோபமடைந்துள்ளதாகவும், அதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயே கடந்த வாரத்தில் கொரிய நாடுகளுக்கு இடையேயான தொடர்பாடல்களை துண்டித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம்-ஜாங்-உன் ஒரு சர்வாதிகாரி என சித்தரித்து வட கொரியாவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் வட கொரிய எல்லையைத் தாண்டி துண்டுப்பிரசுரங்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டில், கிம்-ஜாங்-உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இடையேயான இராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டுக்கும் இடையே பரஸ்பர அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தென்கொரியாவின் சமூக சேவையாளர்கள் எனக் கூறுவோரும் வடகொரியாவின் பிரிவினைவாதிகளும் நீண்ட காலமாக வடகொரியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் என்பதை நன்கு அறிவோம் என கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்வலர்கள் வடகொரிய இறையாண்மை மற்றும் அணுசக்தி பற்றிய விவகாரங்களில் பைத்தியக்காரத்தனமான செய்திகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்கொரியா மீண்டும் மீண்டும் சாக்குப்போக்கு கூறாது வடகொரியாவுக்கு எதிராக செயற்படுவோரை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.