"ஆவா" குழு என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த ரவுடிகள்..! வயோதிபர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல், நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயக்கம்..
கிளிநொச்சியில்- தர்மபுரம் பகுதியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளது.
தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 ஆம் திகதி இரவு நுழைந்த 7 பேர் கொண்ட குழுவொன்று தம்மை ஆவா குழு என தெரிவித்துள்ள நிலையில் வீட்டினுள்
இருந்த கதிரைகள் உட்பட பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன் வயோதிபர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது வயோதிபரை குறித்த வீட்டில் வசிக்க கூடாது என எச்சரித்த ரௌடிக்கும்பல் அவரை யாழ்ப்பாணத்தில் வரணிப்பகுதியில் உள்ள அவரது மற்றைய வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று 3 ஆம் திகதி தர்மபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்ற வயோதிபருக்கு பல மணிநேர காத்திருப்பின் பின்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று 4 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அப்பகுதியில் இருந்து கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
இந் நிலையில் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை தொடர்பில் தர்மபுரம் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.