SuperTopAds

தமிழகத்தில் 25 ஆயிரம் பேரை தாக்கிய கொரோனா!! -நேற்று மட்டும் 12 பேர் சாவு-

ஆசிரியர் - Editor III
தமிழகத்தில் 25 ஆயிரம் பேரை தாக்கிய கொரோனா!! -நேற்று மட்டும் 12 பேர் சாவு-

கட்டுப்படுத்த முடியாத நிலையில் மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னையில் நேற்று மட்டும் 12 பேர் பலியதுடன், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது.

5-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது புதிதாக நேற்று 1,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் பரவி வருகிறது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 1,091 பேரில் 809 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,036 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 55 பேர் என ஒரே நாளில் மொத்தம் 1,091 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 586 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 644 ஆண்கள் மற்றும் 447 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 ஆயிரத்து 394 ஆண்களும், 9 ஆயிரத்து 179 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 13 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 536 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

இதுவரை 13 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 7 ஆயிரத்து 176 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பெண்கள் உள்பட 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 9 ஆண்களும், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு ஆணும் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, மேலும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 78 வயது ஆண் கொரோனா வைரசால் மட்டும் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணரலால் உயிரிழந்து உள்ளார்.