மீன் பிடி அமைச்சருக்கு எதிராக போராடுவோம் -அட்டாளைச்சேனையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள்
எமது தொழிலை இலகுபடுத்தும் வகையில் கடற்கரையோரமாக நிர்மாணிக்கப்பட இருந்த வீதியை இடைநிறுத்திய தரப்பினர் மீண்டும் அவ்வீதியை பூரணமாக செப்பமிட்டு உதவ வேண்டும் எனவும் அவ்வாறு குறித்த வீதியை மீண்டும் அமைக்காவிட்டால் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை கோணாவத்தை-8 பகுதியில் வசிக்கின்ற சுமார் 55 படகுகளை கொண்ட மீனவ குடும்பங்கள் கடந்த பல வருடங்களாக சிரமங்களுக்கு மத்தியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த போதிலும் பிடிக்கபப்டும் மீன்களை இலகுவாக சந்தைப்படுத்தவும் படகுகளுக்கான எரிபொருள் உள்ளிட்ட இதர பொருட்களை கொண்டு செல்வதற்கு சீரான வீதி இன்மையினால் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கடிதம் ஊடாக தமது பிரச்சினைகளை முன்வைத்த போதிலும் செயலுரு பெறாமையினால் அப்பகுதி விளையாட்டு கழகம் ஒன்றின் உதவியுடனும் தனவந்தர் ஒருவரது பூரண சம்மதத்துடனும் குறித்த வீதியை தற்காலிகமாக அமைக்க முடிவு செய்தள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை(30) அப்பகுதியில் கிறவலை முதற்கட்டமாக கொட்டி தமக்கு தேவையான வீதியை ஆரம்பித்த வேளை சில அரசியல் தரப்பினரின் தூண்டுதல் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அவர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.
அத்துடன் பிடிக்கப்படும் மீன்களை கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு கடற்கரையில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள சந்தைப்படுத்த மீன்களின் நிறை அளக்கப்படும் கட்டடத்திற்கு மண்ணில் புதைந்து கால்நடையாக தடுமாறி தினமும் வருவதாக குற்றஞ் சுமத்துக்கின்றனர்.
இவ்வாறான சிரமங்களை தவிர்ப்பதற்கும் சந்தைப்படுத்தலை இலகுபடுத்தவும் சீரான போக்குவரத்து ஒன்றை இப்பகுதி மீணவர்கள் மேற்கொள்ள இவ்வீதி அத்திய அவசியமாகின்றது.
எனவே சம்பந்தப்பட்ட உரிய தரப்பினர் இவ்வீதி அமைப்பது தொடர்பில் உளரிய கவனம் எடுத்து விரைவாக அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்வாறு குறித்த நிறுத்தப்பட்ட வீதி அமைக்க படாவிடின் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.