கல்முனை- அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் சுகாதார நடைமுறையுடன் கல்முனையில் இருந்து மாகாணங்களிற்கிடையிலான பஸ் சேவைகள் ஆரம்பமாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை(26)கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது காலை கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் காலை 10 மணியளவில் பஸ் சேவை ஒன்று ஆரம்பமானதுடன் அதே சமயம் அக்கரைப்பற்றில் இருந்து காங்கேசந்துறை நோக்கி மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமாகின.
குறித்த சேவை கல்முனை பஸ் நிலைய நேரமுகாமையாளரின் வழிநடத்தலில் கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு தொடர்பில் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரானா நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அத்துடன் குறித்த பஸ் நிலையத்தின் நேரமுகாமையாளர் தனது கருத்தில்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பு கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து மாகாண ரீதியாக தற்போது பஸ் சேவை ஆரம்பமாகியுள்ளது.இன்றைய தினம் யாழ்ப்பாணம் நோக்கி மீண்டும் சேவை ஆரம்பமாகி உள்ளது.நாளை கொழும்பு விமான நிலையம் நோக்கி மற்றுமொரு சேவை ஆரம்பமாக உள்ளது.இன்றிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையானது ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஸ் சேவை இடம்பெறவுள்ளதாகவும், இது காலப்போக்கில் அதிகரிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எனினும் பஸ் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் எம்மால் சிறப்பான சேவையை வழங்க முடியும் என்றார்.
அத்தோடு உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை தனியார் பேருந்தும் அரச பேருந்து சேவை போன்று மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில், திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை கல்முனை பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்துள்ளன. வழமையைவிட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பொதுமக்களின் விகிதம் மிக்கக்குறைந்து காணப்பட்டது.
மேலும் கல்முனையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசம் அணியுமாறும், பஸ்சில் சமூக இடைவெளியை பேணுமாறும் முகக்கவசம் அணியாது பஸ்சில் பயணிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.