தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பாகவும், தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாகவும் சுமந்திரன் என்ன பேசினார்..? பூரணமான தமிழாக்கம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பாகவும், தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாகவும் சுமந்திரன் என்ன பேசினார்..? பூரணமான தமிழாக்கம்..

தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ளவர்களும், மற்றய கட்சிகளில் உள்ளவர்களும் கூட சுமந்திரனின் கருத்துக்களுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கும் நிலையில் சிங்கள மொழியிலான சமூக ஊடகத்திற்கு சுமந்திரன் வழங்கிய செவ்வியில்

கூறியிருந்த கருத்துக்கள் தொடர்பாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேர்காணலின் தமிழாக்கம் இங்கே தரப்படுகின்றது. 

கேள்வி : தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் யாது? 

பதில்: இந்த தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை என்ற நிலைப்பாடு எமக்கு சுதந்திர கிடைக்கப் பெற்ற நாள் முதல் நிலவுகின்றது.அதனை சரி செய்வதற்காக 1949 ஆம் ஆண்டு சமடி கட்சி உருவாக்கப்பட்டது.அந்த கட்சி காலம் செல்லச் செல்ல வௌ;வேறு பெயர் மாற்றம் பெற்று தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பாக உள்ளது. 

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் ரீதியான அமைப்பொன்றா? 

பதில்: இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பானது 1970 களிலேயே உருவானது. ஆனால் எமது கட்சி 1949 ஆம் ஆண்டே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. 

கேள்வி: ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரனே நடத்தினார்? 

பதில்: இல்லை. அவ்வாறு எதுவும் இல்லை. 

கேள்வி: அவர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தை நடத்தினார்.இரா.சம்பந்தன் அதில் கலந்து கொண்டார்? 

பதில்: இல்லை. 

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப தோற்றம் பெறவில்லை என்று கூறுகிறீர்களா?

பதில்: இல்லை. அவ்வாறு தோற்றம் பெற்றது என்று கூற முடியாது. 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் காணப்பட்டது.அந்த காலத்திலேயே அது தோற்றம் பெற்றது.எனவே குறித்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலமது. 

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதில்7 கட்சிகள் அங்கம் வகித்தன.எனினும் தற்போது புளொட்,டெலோ மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய மூன்று கட்சிகள் மாத்திரமே காணப்படுகின்றன? 

பதில்: தற்போது மூன்று கட்சிகள் மாத்திரமே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.ஆரம்பிக்கப்பட்ட போது4 கட்சிகள் காணப்பட்டன. அந்த 4 கட்சிகளில் ஒரு கட்சியே தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளது.காலத்திற்கு காலம் சில கட்சிகள் இணைந்து கொள்ளும்.அதே போன்று சில கட்சிகள் வெளியேறும். 

கேள்வி: ஆனந்த சங்கரியும் இதில் அங்கத்துவம் வகித்தார்.உங்களுடன் இணைந்து செயற்பட முடியாது என்று அவர் கூறி கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்? 

பதில்: ஆனந்த சங்கரி தமிழர் விடுதலை கூட்டணியிலேயே (TULF) இருந்தார். ஆர்ம்பத்தில் அந்த கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்தது.சமஸ்டி கட்சி இருக்கவில்லை. ஆனந்த சங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் முரண்பட்டு வழக்கு தொடர்ந்து அதன் பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.அதன் பின்னரே பெடரல் கட்சி கூட்டமைப்பில் இணைந்தது. 

கேள்வி: அது மாத்திரமல்ல.விக்கினேஸ்வரன் , அனந்தி சசிதரன் உள்ளிட்ட வௌ;வேறு தரப்பினர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.அவர்கள் பிரதானமாக உங்கள் மீதே குற்றஞ்சுமத்துகின்றனர்? 

பதில்: ஆம். இருபுறங்களிலுமே என்மீது குற்றஞ்ச்சாட்டப்படுகின்றன.அடிப்படைவாதிகளாக தம்மை காண்பிக்க முயற்சிக்கும் விக்கினேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றோரும் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். தாம் தேசிய அரசியலில் இணைந்து செயற்பட வேண்டும் என்று எண்ணும் டக்ளஸ் தேவானந்தா போன்றோரும் என் மீது குற்றஞ்சுமத்துகின்றனர். 

கேள்வி: நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைக்கவே முயற்சிக்கிறீர்கள் என்பதே அவர்கள் உங்கள் மீது சாட்டும் குற்றச்சாட்டாக இருக்கிறது? 

பதில்: அவ்வாறில்லை. கடந்த2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிட வேண்டாம் எனக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு நாம் உதவி செய்தோம்.எனவே அதனை ஐக்கிய தேசிய கட்சிக்கு நாம் உதவியதாக யாராலும் கூற முடியாது. 

கேள்வி: தெளிவாகக் கூறுங்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்..சுமந்திரனா? 

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தான். 

கேள்வி: அது வெளியில் புலப்படுவதாகும்.ஆனால் உண்மையான தலைவர் யார் என்பதைக் கூறுங்கள்?

பதில்: உண்மையான தலைவர் சம்பந்தனே. 

கேள்வி: இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை நடத்திச் செல்வது எம்..சுமந்திரன் தான் என்று நான் நேரடியாகக் கூறினால்? 

பதில்: இல்லை. நான் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.அந்த கருத்தை நான் நிராகரிகின்றேன். அவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

கேள்வி: அவ்வாறெனில் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா? 

பதில்: இல்லை. அழுத்தம் என்று கூறுவது சரியல்ல. 

கேள்வி: அவ்வாறெனில் நீங்கள் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கிறீர்கள்? 

பதில்: இல்லை. அவ்வாறில்லை. இரா.சம்பந்தன் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் என்னுடன் கலந்தாலோசித்து ஆலோசனைப் பெற்றே செயற்படுவார். 

கேள்வி: அவ்வாறெனில் நீங்கள் உத்தியோகபூர்வமற்ற தலைவர் என்று என்னால் கூற முடியும்?

பதில்: இல்லை. அவ்வாறு கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் நான் கூறும் ஆலோசனைகளை அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.அவரே இறுதி தீர்மானங்கள் அனைத்தையும் எடுப்பார். 

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் சகலரும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சியமையால் தானே அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவாக விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்காக முன்னின்றது? 

பதில்: விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்திற்காக கூட்டமைப்பு முன்னின்றது என்று கூற முடியாது.அவர்களுடன் இணைந்து செயற்பட்டோம். 2001 தொடக்கம்2004 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.அந்த காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

கேள்வி: அவ்வாறெனில் எம்..சுமந்திரன் அடிப்படைவாதியா? 

பதில்: இல்லை. நான் அடிப்படைவாதியல்ல. 

கேள்வி: சிங்கள , தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதைக் காண விரும்புகிறீர்களா? 

பதில்: ஆம். அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது எனது ஆழமான தேவைப்பாடாகும். 

கேள்வி: ஆனால் சில கருத்துக்களை வெளியிடும் போது நீங்கள் அடிப்படைவாத நபர் என்பது போல தோன்றுகிறதே? 

பதில்: எனது கருத்துக்கள் அவ்வாறு வெளிப்படாது. 

கேள்வி: உங்களது அரசியல் தலைவர் யார்? 

பதில்: எனது அரசியல் தலைவர் தற்போது வரை இரா.சம்பந்தன் ஆவார். 

கேள்வி: நீங்கள் 2010 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக தேசிய பட்டியலுக்கூடாக அரசியலுக்குள் பிரவேசித்தீர்கள்.விடுதலைப் புலிகளுக்காக அல்லது சிறைக்கைதிகளுக்காக அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் என வௌ;வேறு வகையில் விடுதலைப்புலிகளுக்காக ஒரு சட்டத்தரணியாக அரசியலில் முன்னின்றீர்கள்.இவற்றுக்கான பிரதிபலிப்பல்லவா அன்று காணப்பட்டது? 

பதில்: இல்லை. நான் விடுதலைப் புலிகளுக்காக முன்னின்றேன் என்று யாராலும் கூற முடியாது.நான் சிவில் வழக்குகளைக் கையாளும் சட்டத்தரணியாவேன்.எனவே நான் குற்றவியல் வழக்குகளை கையாளவில்லை. 1990 ஆம் ஆண்டுகளில் நான் சட்டத்தரணியாக எனது பணியை ஆரம்பித்த போது ஓரிரு குற்றவியல் வழக்குகளை கையாண்டிருக்கிறேன்.அதன் போது மக்கள் விடுதலை முன்னணிக்காகவே (ஜே.வி.பி.)அவ்வாறான வழக்குகளில் முன்னிலையாகினேன்.விடுதலைப் புலிகளுக்காக நான் முன்னிலையாகினேன் என யாராலும் கூற முடியாது. 

கேள்வி: 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுமார்58 ஆயிரம் வாக்குகளை நீங்கள் பெற்றீர்கள்.அவ்வாறெனில் மக்கள் விருப்பத்திற்குரிய ஒரு நபராவீர்கள்.ஆனால் ஜே.வி.பிக்காக முன்னின்றிருந்தால் அவ்வாறு58 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்க முடியாதே? 

பதில்: வாக்குகளைப் பெற்றிருக்க முடியும்.ஆரம்பத்தில் மே தினமொன்றின் போது ஜே.வி.பி.யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் நானும் சிவப்பு நிற ஆடையணிந்து அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.யாழ் வீதியில் நான் அவர்களுடன் பயணித்திருக்கிறேன். எனவே எமது மக்கள் அவ்வாறு நோக்குபவர்கள் அல்ல. 

கேள்வி: அவ்வாறெனில் உங்களது அரசியல் கோட்பாடுகள் ஜே.வி.பியுடனா உள்ளது?தவறான நிலைப்பாட்டிலல்லவா இருக்கிறீர்கள்?

பதில்: இல்லை. ஜே.வி.பியுன் எனது அரசியல் கோட்பாடு இல்லை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக நாம் பாரிய ஜனநாயக போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.அந்த போராட்டத்தில் ஜே.வி.பியும் எம்முடன் கைகோர்த்து செயற்பட்ட ஒரு அமைப்பாகும். 

கேள்வி: அநுரகுமார திஸாநாயக்க உங்களது தலைவர் என்று கூறுகிறீர்களா? 

பதில்: இல்லை. அவ்வாறு கூறிவில்லை. நான் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து சேவையாற்றுவதற்கு தயாரகவிருக்கும் ஒரு நபராவேன். 

கேள்வி: எனினும் யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் சுமந்திரன் வாக்குகளைப் பெற்றதன் பின்னர் அந்த திசைக்கு வருவதே கிடையாது என்று கூறுகின்றார்களே? 

பதில்: இல்லை. அவ்வாறு யாரும் கூற மாட்டார்கள். 

கேள்வி: அப்படியென்றால் தற்போது சுமந்திரன் எங்கு அரசியல் கைதிகள் பற்றி பேசுகின்றார்? காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி எங்கு பேசுகின்றார்?காணி பற்றி எங்கு பேசுகின்றார்? கொழும்பிற்கு வந்து தேர்தல் பற்றியும் ஊரடங்கு சட்டம் பற்றியுமே பேசிக் கொண்டிருக்கிறார்? 

பதில்: நீங்கள் கூறிய விடயங்கள் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.அரசியல் கைதிகள் பலர் விடுதலையாவதற்காக நான் செயற்பட்டிருக்கிறேன்.காணி விடுவிப்பிற்காகவும் நான் செயற்பட்டிருக்கிறேன்.இவை பற்றி அவர்கள் நன்கு அறிவார்கள். 

கேள்வி: விடுவிப்பதற்கு இன்னும் அரசியல் கைதிகள் இருக்கிறார்களா? 

பதில்: ஆம். சுமார் 70 பேர் வரையில் இருக்கிறார்கள். 

கேள்வி: காணி விடுவிப்பு தொடர்பில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா? 

பதில்: இல்லை. அதில் திருப்தியடையவில்லை. ஆனால் சுமார் நூற்றுக்கு80 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்? 

பதில்: இல்லை. அவர்கள் பற்றி எதுவுமே இடம்பெறவில்லை. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்(OMP) ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அதுவும் இதுவரையில் வெற்றிகரமாகச் செயற்படவில்லை. 

கேள்வி: ஏன் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை நாடு முழுவதும் சென்று கூறுகிறீர்கள்? 

பதில்: நாட்டுக்கு எதிராக அல்ல. உண்மையில் இலங்கை சிறந்த நாடாக உள்ளது என்றால் இவற்றை புறந்தள்ள முடியாது. இவை அனைத்திற்கும் சரியான முறையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.அவ்வாறில்லாமல் நாடு முன்னோக்கி பயணிக்க முடியாது. 

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பில் புலம் பெயர் புலிகளுடன் சுமந்திரனுக்கல்லவா கூடுதலான தொடர்புகள் உள்ளன? 

பதில்: புலம் பெயர் புலிகளுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. 

கேள்வி: ருத்ரகுமாரனுக்கும் உங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளது? 

பதில்: அவருடன் எந்த தொடர்பும் கிடையாது. 

கேள்வி: தொலைபேசி தொடர்பு கூட இல்லையா? 

பதில்: ஓரிரு சந்தர்ப்பங்களில் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன்.ஆனால் அதனை எனக்கு அவருடன் தொடர்பு இருப்பதாகக் கூற முடியாது.எனக்கு பல புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு இருக்கிறது.உதாரணமாக GTF, BTF, CTC, ETC போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளன.  அந்த அமைப்புக்கள் அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுபவையாகும். 

கேள்வி: ருத்ரகுமார் இறுதியாக எப்போது உங்களுடன் உரையாடினார்.ஞாபகம் இருக்கிறதா? 

பதில்: இல்லை. எனக்கு ஞாபகம் இல்லை. கலிபோர்னியாவிலுள்ள அவர்களது பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு கடந்த2016 அல்லது 2017 ஆம் ஆண்டு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் நான் அந்த அழைப்பை புறக்கணித்துவிட்டேன். 

கேள்வி: ருத்ரகுமார் என்பவர் நாட்டிலிருந்து வெளியேறி தனி ஈழம் அமைக்க முற்படும் ஒரு நபராவார்.அவ்வாறிருக்கையில் ஏன் அவருடன் தொடர்பினைப் பேணுகிறீர்கள்? 

பதில்: தொடர்புகளைப் பேணுகின்றோம் என்று கூற முடியாது.அவர் பாராளுமன்றத்தில் என்னை உரையாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.அதற்கு மறுப்பு தெரிவித்து நான் அவருக்கு பதலளித்தேன். 

கேள்வி: புலம் பெயர் புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உங்கள் மூலமாகத் தானே நிதி பரிமாற்றப்படுகிறது? மத்தியில் இருக்கும் முகவர் நீங்கள் தானே?

பதில்: இல்லை. குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் பணம் அனுப்புவார்கள்.அவ்வாறான பொருhளாதாரமே வடக்கில் இருக்கிறது. அங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை.அதற்கான வாய்ப்புக்கள் இல்லை.எனவே தான் வெளிநாடுகளிலுள்ள உறவினர் அனுப்பும் பணத்தைக் கொண்டே அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.அவை தவிர வேறு எந்த பணத் தொடர்பும் இல்லை. 

கேள்வி: நீங்கள் பிரிவினை வாதத்தை ஏற்கும் நபரா? தனி ஆட்சியை பெற வேண்டும் என்ற இலக்கை கொண்டவரா? 

பதில்: இல்லை. நாம் ஒரு போதும் அவ்வாறு சிந்திப்பவர்களல்ல. 

கேள்வி: அப்படியென்றால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 

பதில்: ஆம். அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஆனால் அனைத்து மக்களுக்கும் அவர்களுக்கான உரிமை கிடைக்கப் பெற வேண்டும்.அரசாங்க அதிகாரத்தை அவர்களும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 

கேள்வி: அவ்வாறெனில் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி முறைமையைக் கோருகின்றது? 

பதில்: ஆம் நாம் பெடரல் முறைமையையே கோருகின்றோம். காரணம் பெடரல் முறைமைக்குள் தான் அனைத்து மக்களுக்கு அரசாங்க அதிகாரத்தை பாவிக்க முடியும் என்ற சூழலை உருவாக்க முசூடியும். 

கேள்வி: தனி ஆட்சியைக் கோருகின்றீர்கள் என்பது இதிலிருந்தே புலப்படுகிறதே.சமஷ்டி ஆட்சி என்பது தனியாட்சி அல்லவா? 

பதில்: அமெரிக்கா, அவுஸ்திரேலியா , கனடா, பல ஐரோப்பிய நாடுகள் என்பவற்றில் சமஷ்டி;முறைமையே காணப்படுகிறது. அதனை தனி இராச்சியம் என்று யாரும் கூறுவதில்லையே? அவை பலமான நாடுகளாகும். சமஷ்டி முறைமை காணப்படுவதால் தான் அந்த நாடுகள் பலமானவையாகக் காணப்படுகின்றன.  

கேள்வி: தேசிய கொடியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 

பதில்: ஆம். ஏற்றுக் கொள்கின்றோம். 

கேள்வி: தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்கறீர்களா? 

பதில்: ஆம்;. ஏற்றுக் கொள்கின்றோம். யாழ்ப்பாணத்தில் நானும் இரா.சம்பந்தனுமே தேசிய கொடியை ஏற்றும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம். 

கேள்வி: ஆனால் யாழ்ப்பாணத்தில் பெருமளவானோர் தேசிய கொடியை ஏற்றுவதில்லையே? உங்களால் ஏன் இதனை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை? 

பதில்: வரலாற்றை சற்று நோக்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்பானது முழுமையாக தமிழர்களைப் புறக்கணித்து எம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எவற்றையும் கவனத்தில் கொள்ளாது உருவாக்கப்பட்டதாகும்.அதிலிருந்தே 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தனி இராச்சியம் வேண்டும் என்ற கோரிக்கை வெளிவர ஆரம்பித்தது.அந்த சந்தர்ப்பத்திலேயே தேசிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே அதனைப் புறக்கணிக்கும் பலர் உள்ளனர்.அவ்வாறானவர்களுக்கு இன்னமும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது.முன்னோர்கள் புறக்கணித்த ஒன்றை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது என்ற நிலைப்பாடு தற்போதைய தலைமுறையினர் சிலருக்கு உள்ளது.ஆனால் என்னில் அவ்வாறான நிலைப்பாடு இல்லை. 

கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் நோக்கத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? 

பதில்: இல்லை. ஒருபோதும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. 

கேள்வி: எந்த சந்தர்ப்பத்திலும் அதனை அனுமதிக்க மாட்டீர்களா? 

பதில்: இல்லை. ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அதனை நான் யாழ்ப்பாணத்திலும் கூறியிருக்கின்றேன்.ஏனைய பிரதேசங்களிலும் கூறியிருக்கின்றேன்.அதன் காரணமாகவும் எனக்கு பாரிய எதிர்ப்புக்கள் உள்ளன.எமக்காக போராடியவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று என்மீது பலர் குற்றஞ்சுமத்துவர்.அதனை ஏற்றுக் கொள்ளாத நான் அந்த ஆயுத இயக்கத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 

கேள்வி: ஏன் தற்போது பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? 

பதில்: இலங்கை ஜனநாயக நாடென்றால் பாராளுமன்றம் இருக்க வேண்டும்.பாராளுமன்றம் இல்லாத ஜனநாயக நாடு உலகில் எங்கும் இல்லை. 

கேள்வி: அரசியலமைப்பின் பிரகாரம் தற்போது பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாதல்லவா? 

பதில்: முடியும். அரசியலமைப்பில் நாட்டில் அவசர நிலைமை ஏற்பட்டால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேள்வி: ஆனால் அவசர கால நிலைமையை அரசாங்கம் சிறப்பாக முகாமைத்துவம் செய்கின்றதல்லவா? கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லையா? 

பதில்: அரசாங்கத்திற்கு மூன்று தொகுதிகள் உள்ளன.அவற்றில் ஒன்று நிறைவேற்றதிகாரமாகும் , மற்றையது நீதித்துறையாகும்.மூன்றாவது பாராளுமன்றமாகும். இந்த மூன்று காரணிகளில் ஒன்று  நீக்கப்பட்டாலும் அரசாங்கம் வீழ்ச்சியடையும்.எனவே தான் கூடியது 3 மாத காலத்திற்கு மேல் பாராளுமன்றம் இன்றி நாடு ஆட்சி செய்யப்படக் கூடாது என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த 3 மாத காலத்திற்கிடையில் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேள்வி: எனினும் பாராளுமன்றம் இல்லாத போதிலும் அரசாங்கத்தினால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதல்லவா? 

பதில்: இல்லை. அவ்வாறு கூற முடியாது. காரணம் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

கேள்வி: புதிய சட்டங்கள் எதற்கு? 

பதில்: கொரோனா வைரஸ் பற்றி புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.தற்போது உலக நாடுகள் அனைத்தும் பாராளுமன்றத்தைக் கூட்டி புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளன.இலங்கையில் தற்போது காணப்படும் தொற்று நோய் கட்டளைச் சட்டம் (CDO vdg;gLk; Contagious Diseases Ordinance)  சட்டமானது இற்றைக்கு150 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும்.தனிமைப்படுத்தல் செயற்பாடு உருவாக்கப்பட்டது நூறு வருடங்களுக்கு முன்னராகும். 

கேள்வி: எனினும் இது அடிப்படையற்ற வாதமாகும் என்று பலர் கூறுகின்றார்களே? 

பதில்: மேற் குறிப்பிட்டவற்றில் ஒன்று கொலோராவிற்காகவும் மற்றைய சட்டம் அம்மை நோய்க்காகவும் உருவாக்கப்பட்டதாகும்.அதன் சுபாவம் வேறுபட்டதாகும். கொரோனா வைரஸின் சுபாவம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.எனவே தான் பிரித்தானியா , இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் செயற்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவ்வாறில்லாமல் நிறைவேற்றதிகாரம் மாத்திரமே இதனைச் செய்வதானால் அது நீதித்துறை இன்றி செய்யும் செயற்பாடாகும். 

கேள்வி: ஊரடங்கு சட்டம் சட்ட பூர்வமற்றது என்று ஏன் எல்லா சந்தர்;பங்களிலும் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? 

பதில்: ஆம். ஊரடங்கு சட்டம் சட்டபூர்வமற்றது தான்.அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.  

கேள்வி: ஊரடங்கு சட்டம் சட்டபூர்வமானது தானே.நோய் சிகிச்கை மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் படி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உறுப்புரைக்கு அமைய அது சட்டபூர்வமானதே? 

பதில்: நான் ஒரு சட்டத்தரணியாவேன். என்னிடத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கள் பல உள்ளன.அவ்வாறு ஊரடங்கு சட்டத்தை பிரயோகிக்க முடியாது என்று அவற்றில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அவை பிழையான தீர்ப்புக்களா? 

கேள்வி: அவ்வாறெனில் ஏன் மனித உரிமைகள் ஆணைக்குழு இதனை வலியுறுத்தியது? 

பதில்: மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரம் இருக்கிறது.அதற்கமையவே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நான் ஊரடங்கு சட்டம் தேவையற்றது என்று கூறவில்லை.தற்போதைய சூழலில் ஊரடங்கு சட்டம் அத்தியாவசியமானதாகும். ஆனால் அதனை முறையாகச் செயற்படுத்த வேண்டும்.மாறாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க முடியாது.அதனை வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி வெளியிட வேண்டும்.எந்த நேரத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும், யாரிடம் ஊரடங்கு அனுமதி பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றி மக்கள் அதன் மூலம் அறிய வேண்டும்.இவை அனைத்தும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கேள்வி: பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருவதற்கான காரணமாக தற்போது நீங்கள் கூறுவது பொய்யல்லவா? உண்மையான நோக்கம் வேறொன்றல்லவா? 

பதில்: நாட்டில் ஜனநாயகம் தொடர்ந்தும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் பாராளுமன்றம் இயங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். 

கேள்வி: நிலையியற் கட்டளையை கைவிட்டு பாராளுமன்றத்தைக் கூட்டும் சந்தர்ப்பத்தில் வேட்டுமனு தாக்கல் பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது.  அதற்கேற்ப மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான யோசனையை முன்வைப்பதற்காக் தானே மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள்? 

பதில்: பொதுத் தேர்தலை முன்னரே நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலை நடத்த தீர்மானித்தார்.ஆனால் அதற்கு பல நிபந்தனைகள் உள்ளன.நான்கரை வருடங்குப் பின்னரே அதனைச் செய்ய முடியும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை மீறி செயற்பட்டார் என்று கூறியே நீதிமன்றம் அதனை அதிகார துஷ்பிரயோகம் என்று தீர்ப்பளித்தது.இவை தவிர வேறு பல நிபந்தனைகளும் உள்ளன.பழைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும்.இந்த நிபந்தனையை ஜனாதிபதி மீறுவாராக இருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவித்தலும் செல்லுபடியற்றதாகும். 

கேள்வி: இரண்டாகப் பிளவடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைந்து மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகவா நீங்கள் உதவுகின்றீர்கள்? 

பதில்: ஐக்கிய தேசிய கட்சிக்காக நான் இதனைச் செய்யவில்லை. இன்னும்6 மாத காலம் கொடுத்தாலும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணையப் போவதில்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.அதனை நான் நன்கறிவேன். அது பொய்யான குற்றச்சாட்டாகும். 

கேள்வி: நீங்கள் அரசியல் சூழ்ச்சியாளரா? 

பதில்: இல்லை. நான் அரசியலில் இருக்கின்றேன். அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தேசிய பிரச்சினைக்கான தீர்வினையே நான் எதிர்பார்க்கின்றேன். 

கேள்வி: நாம் அறிந்த வகையில் நாட்டுக்கு சாதகமான எந்தவொரு வழக்கிலும் நீங்கள் முன்னிலையாகியதில்லை.நாட்டுக்கு பாதகமான சதித்திட்ட வழக்குகளிலேயே நீங்கள் முன்னின்றீர்கள்? 

பதில்: 2018 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக நான் முன்னிலையாகியிருந்தேன்.உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 7 பேர் ஒன்றாக தீர்ப்பு வழங்கினர்.அவ்வாறெனில் அவர்களும் சதித்திட்டங்களில் தொடர்புப்;டுள்ளார் என்று கூறுகிறீர்களா? 

கேள்வி: இறுதியாக கேட்க்கப்படும் கேள்வி.உங்கள் மனசாட்சியின் படி நீங்கள் பதிலளிக்க வேண்டும்.சிங்கள மக்களை வெறுக்கீன்றீர்களா? 

பதில்: இல்லை. ஒருபோதும் நான் அவ்வாறு எண்ணியதில்லை. 5 வயது முதல் நான் கொழும்பிலேயே வசிக்கின்றேன்.என்னுடைய நண்பர்களில் பலர் சிங்களவர்களாவர்.எனவே சிங்களவர்கள் மத்தியில் வாழ்வதை பாக்கியமாகவே நான் கருதுகின்றேன். 

கேள்வி: தெற்கில் இவ்வாறு கூறி விட்டு வடக்கிற்கு சென்று இதற்கு முரண்பட்ட கருத்துக்களை கூறுவீர்கள் அல்லவா? 

பதில்: வடக்கிலும் நான் இதனையே கூறுவேன். 

கேள்வி: அந்த அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட்டு செயற்படுவீர்கள்? 

பதில்: இல்லை. நான் அவ்வாறு செயற்படுபவன் அல்ல.அவ்வாறு செயற்படுவதில்லை என்று தான் எனக்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

கேள்வி: இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் உங்களால் வெற்றி பெற முடியுமா? அந்த 58 ஆயிரம் வாக்குகளையும் பெற முடியுமா? 

பதில்: நிச்சயமாக. அதனை விடவும் அதிகமான வாக்கினைப் பெற முடியும். அதனை விட இரண்டு மடங்கு வாக்கினைப் பெற முடியும். ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தால் என்னால் வெற்றி பெற முடியும். 

கேள்வி: இது சவாலா? 

பதில்: ஆம். இது சவாலாகும்

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு