இன்று காலையும் உயிரிழப்பு!! -தமிழகத்தில் 45 பேர் கொரோனாவால் பலி-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை, கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு பணிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளபோதும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
தமிழகத்தில் 40 பேர் பலியான நிலையில், சென்னையில் நேற்று கூடுதலாக 4 பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது மூதாட்டி ஒருவர் பலியானார்.
இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். இதேபோன்று வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்றுக்காக நபர் ஒருவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்து உள்ளார்.
45 வயதுடைய அவர், சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி சுகாதார பணியாளராக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். தொடர்ந்து மற்றொருவர் பலியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்தது.
இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்து உள்ளது.