தமிழக அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகியது!! -கொரோனா தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்-

ஆசிரியர் - Editor III
தமிழக அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகியது!! -கொரோனா தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்-

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் இன்று சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 2526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அதிக அளவாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் தற்போது சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் அதிக பாதிப்பு உள்ள சிவப்பு மண்டலத்தில் வருகின்றன. வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க முதலமைச்சரால் அமைக்கப்பட்ட 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை சமர்பித்துள்ளனர். 

இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. 

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.