விரைவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்: இந்திய மருந்து நிறுவனம் தகவல்!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்க்கு இதுவரை தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய பல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் இதுபோன்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து நிறுவன அதிபர் பூனாவாலா தனியார் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்க 2 ஆண்டுகள் அல்லது குறைந்த பட்சம் 18 மாதங்களாவது ஆகும் என்று உலகின் பல விஞ்ஞானிகளும் தெரிவித்து வந்தனர். நாங்களும் அப்படித்தான் கூறி வந்தோம். ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவுடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சியின் காரணமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு உலகை அச்சுறுத்திய எபோலா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தது இதே குழுவினர் தான்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. எங்கள் சோதனை வெற்றிகரமான முடிவை தருமானால் அந்த மருந்தை இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இவர்கள் கண்டுபிடிக்க இருக்கும் கொரோனா தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும்? என்று கேட்டபோது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று அவர் பதிலளித்தார்.