SuperTopAds

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம், ரஜிவர்மன் நினைவேந்தல்..! இன்று யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

ஆசிரியர் - Admin

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராகி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராகக் கடமையாற்றி வந்தவேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இவர்களின் நினைவாக இன்று நடந்த நிகழ்வில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலம்பெற வேண்டியும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுவர வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது.