படையினரைப் பரவலாக்கவே பாடசாலைகள்! - முல்லை. அரச அதிபர் விளக்கம்
முல்லைத்தீவில் ஆறு பாடசாலைகள் படையினரின் தேவைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறித்து, முல்லைத்தீவு மக்கள் தேவையில்லாமல் பீதிகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.
“ இரண்டு கல்வி வலயங்களை சேர்ந்த 6 பாடசாலைகளை படையினர் தேவைக்காக எடுத்துள்ளார்கள். இது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் எடுக்கப்பட்ட தீர்மானம். படையினர் அதிகளவில் ஒரு இடத்தில் இருந்தால் வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என்ற சாத்தியத்திற்காக படையினரை குழுக்களாக வெவ்வேறு இடங்களில் பிரிப்பதற்காகவே பாடசாலைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாடசாலைகளில் தங்கவைப்பதற்காக இல்லை. செறிந்து உள்ள படையினரை பரவலாக்குவதற்காகவே இந்த நடவடிக்கை. இதில் மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை.
தேவையில்லாத வதந்திகளை நம்பி மக்கள் பிரச்சினைகளுக்குள் உள்வாங்க வேண்டாம். 14 நாட்களுக்காக தற்காலிகமாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.