SuperTopAds

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு வருடம் பூர்த்தி-தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை

ஆசிரியர் - Editor IV
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு வருடம் பூர்த்தி-தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை

கடந்த வருடம்  ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில்     இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு  என்பன அன்று இரவு  நடந்தேறியது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோரை தேடி முப்படையினரும் களத்தில் இறங்கிய வேளை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை,நிந்தவூர், பாலமுனை பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக பிரதேச மக்கள் காவல் துறையினருக்கு தகவல் வழங்கினர் இதே வேளை அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் ஆபத்தான பல வெடி பொருட்கள், தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டமையை தொடர்ந்து இராணுவத்தினர் சந்தேக நபர்களை  பிடிப்பதற்கான தேடுதலை முடுக்கி விட்டனர்.

இதனை தொடர்ந்து சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில்  சிறியரக வேன்களில்வந்து  இறங்கிய புதிய நபர்கள் பதட்டத்துடன் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்கள் குறித்த பகுதியில் கடமையாற்றும்   வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து    சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குண்டுதாரிகள் என சந்தேகிப்பவர்கள்  தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் சென்ற போது தங்களை பாதுகாப்பு தரப்பினர் நெருங்கிவிட்டதாக எண்ணி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் . இதில் காவல் துறை உத்தியோகத்தர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் விபரீதத்தை உணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்கியதுடன்  குறித்த பிரதேசத்திற்கு   படையினரை  சுற்றிவழைத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த  படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி பிரயோகம் பரஸ்பரம் இடம்பெற்றது. இதன்பின்னர்  தாக்குதல்தாரிகள் திடிரென  தற்கொலை குண்டை வெடித்து உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜரான விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி ஒருவர் கடந்த காலம் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த   சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும்  சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(DNA) பொருந்தவில்லை என மன்றில்  தெரிவிக்கப்பட்டதை அடுத்து  சாரா என்றழைக்கப்படும்  புலஸ்தினி மகேந்திரனின்  மரபணுபரிசோதனை அறிக்கை அறிய  மீண்டும்  குறித்த அறிக்கையை ஆராய மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று பணித்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமானவர்களின்  தகவல்கள் பின்வருமாறு

 முஹமட் ஹாசீம் முகமட் றில்வான்  (முகமட்  ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)

முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னிஃமுகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)

ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)

அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)

முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)

இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும்

முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)

அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)

மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)

அகமதுலெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)

முகமட் றில்வான் மீரா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)

முகமட் றில்வான்  மருவான் சஹீட் ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)

முகமட் ஜெய்னி அமாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)

முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)

முகமட் சஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை

 இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்

 முகமட் சஹ்ரான் ருசைதா ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின்  மகள்)

அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி)

மேற்குறித்த 17 பேர் உள்ளடங்களாக மரணமாகியதுடன் காயங்களுக்கு உள்ளாகினர் என அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு குறித்த தாக்குதலில்  இறந்தவர்களது பிரேத பரீசோதனை யாவும் கடந்த  ஏப்ரல் 28இ29 திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின்  சட்ட  வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடாத்தப்பட்டிருந்தன.அதன் பின்னர்  மரணமானவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் 2019/5/2 அன்று  அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

மேலும் குறித்த தாக்குதல் சம்பங்களுக்காக உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டிற்கு ஆளாகி பலரும் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டு ஆஜராகி வருகின்றனர்.

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலுக்கு உள்ளாகிய வீடு அடிக்கடி அப்பகுதிக்கு வருகின்ற வெளிமாவட்ட மக்களினால் காட்சிப்பொருளாக பார்க்கப்பட்டு வருகின்றதுடன் இதுவரை புனரமைக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.