SuperTopAds

சஹ்ரான் குழுவின் தாக்குதல் பல குடும்பங்களை நிர்க்கதியாக்கியுள்ளது-அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர்

ஆசிரியர் - Editor IV
சஹ்ரான் குழுவின் தாக்குதல் பல குடும்பங்களை நிர்க்கதியாக்கியுள்ளது-அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர்

இலங்கை உண்மையில் சிறந்த நாடு. இந்த நாட்டையும் எனது தாயையும் எனது சகோதரியான மனநலம் பாதிக்கப்பட்டவரையும் விட்டுவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என  சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டு  கைதாகி பிணையில் விடுதலையான சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர்  தெரிவித்துள்ளர்.

கடந்த வருடம்  ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில்     இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு  என்பன அன்று இரவு  நடந்தேறியது.

இதனை தொடர்ந்து    சம்பவ இடத்திற்கு வந்த  பாதுகாப்பு   படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி பிரயோகம் பரஸ்பரம் இடம்பெற்றது. இதன்பின்னர்  தாக்குதல்தாரிகள் திடிரென  தற்கொலை குண்டை வெடித்து உயிரிழந்தனர். இருந்த போதிலும் குறித்த தாக்குதல்  பகுதியில் இருந்து மனைவி தாய் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியுடன் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தினால் சம்பவ இடத்தில் மனைவியை இழந்தார்.

இவ்வாறான நிலையில்  சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு வருடம் பூர்த்தியை முன்னிட்டு பினிக்ஸ் பறவையாக தனது வாழ்க்கையை ஓட்டோ சாரதியாக மீண்டும் விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் போது எமக்காக அவர் தந்த செவ்வி பின்வருமாறு:

கடந்த பல  நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுதலையான பின்னர் ஓட்டோ சாரதியாக வலம் வருகின்றார்.அவர் தெரிவித்ததாவது

 

ஏப்ரல் 26 சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவித சூழ்நிலை நேரத்தில் மனைவியின் சகோதரிகளை பார்க்கச் சென்ற போது தான் நான் உட்பட மனைவி (இறந்துவிட்டார்) தாய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை உள்ளிட்டோர் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நிலையில் இராணுவ உடைய அணிந்தவர்களால் சுடப்பட்டோம்

இவ்வாறு சுட ஆரம்பிக்கின்ற போது நான் எனது அடையாள அட்டையை காட்டி தமிழ் மற்றும் சிங்களத்தில் கத்திய போதும் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.

சம்பவ தினம் நானும் எனது மனைவியும் எனது அம்மாவின் வீட்டில் தங்கி இருந்தோம். மாலை 7 மணி அளவில் மனைவியின் தாயார் (மாமியார்) தொலைபேசி மூலம் அழைத்து தாங்கள் வசிக்கும் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று உள்ளதாகவும் இதனால் அங்குள்ள தங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என எனது மனைவிக்கு கூறினார்.

இந்த நேரத்தில் தான் தனது தங்கைகளை உடனடியாக பார்க்க வேண்டும் தாயை பார்க்க வேண்டும் என மனைவி அஸ்ரிபா விடாப்பிடியாக கூற எனது மனைவி எனது தாயார் எனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியையும் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றேன்.அப்போது நீங்கள் ஏன் வந்தீர்கள் திரும்பிச் செல்லுங்கள் இங்கே குண்டு வெடித்துள்ளது என மாமியார் கூற அவ்விடத்திலேயே நாங்கள் மீண்டும் திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்.

அவ் வேளையில் பல வெடி சத்தங்கள் துப்பாக்கி சூட்டு வேட்டுக்கள் கேட்டன. முச்சக்கர வண்டி மூலம் நாம் எமது தாயின் வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருக்கும் போது தான் இராணுவத்தினர் எம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவ்வேளை நான் எனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு உயர்த்தியவாறு சுட வேண்டாம் என கூறினேன். அப்போது எனது காலில் சூடு பட்டது.பின்னர் இறங்கி முச்சக்கர வண்டியை வீதி ஓரமாக தள்ள முற்படும் போது எனது மனைவி எவ்வித உணர்வும் இன்றி இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தாள்.அவரின் தலையில் இருந்து இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது.அவ்வேளை அவளை காப்பாற்றுமாறு கூறினேன். அது மாத்திரமன்றி எனது தாயார் எனது சகோதரியும் சிறு சூட்டு காயங்களுக்கு உட்பட்டிருந்தனர் . இராணுவத்தினர் உடனடியாக எனது தாய் சகோதரி என்னையும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

எனது உடம்பில் 5 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக அறிந்தேன். சம்பவ தினம் இராணுவத்தினரோ பொலிஸாரோ எங்களை நிறுத்த சொல்லவில்லை. இராணுவத்தினர் இருளில் நின்றதை நாங்கள் காணவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் முச்சக்கர வண்டியை நிறுத்தியிருப்போம். இன்று எனது மனைவியை இழந்து நான் வாடிக்கொண்டிருக்கிறேன் இதற்கு முற்று முழுதான காரணத்தை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

நான் வைத்தியசாலையில் இருக்கும் போதும் தடுப்பு காவலில் இருக்கும்போதும் என்னை அரசியல்வாதிகளோ நண்பர்களோ உறவினர்களோ யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு பார்க்க வருபவர்களிடம் பல மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றும் இருக்கின்றது.இப்போது எமது சமுதாயத்தில் பலவாறு புரளிகளை பேசுகின்றனர். பரப்புகின்றனர். எனவே பாதுகாப்புத் தரப்பு வீதித் தடை அல்லது பாதுகாப்பு சமிக்கைகளை வைத்திருந்தால் எனது மனைவியின் உயிர் வீணாக போயிருக்காது. இதற்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும் என்று எனது மனைவியை இழந்து தனிமையில் வாடுகிறேன்.இன்று நான் எவ்வித ஜீவனோபாயம் இன்றி சிரமப்படுகின்றேன்.

என்னிடம் இருந்த முச்சக்கர வண்டியையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். தற்போது என்னை விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குற்றத் தடுப்பு பிரிவினர் நான் நிரபராதி என்று கூறுகின்றனர். தற்போது பிணையில் வந்தாலும் மீண்டும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வந்தால் மாத்திரமே நீதிமன்றத்துக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் எனக்கு தெரிவித்துள்ளது.எனவே எனக்கு எவராவது உதவி செய்தால் மீண்டும் எனது வாழ்க்கையை புதிப்பித்து எனது குடும்ப நிலையை பார்த்துக் கொள்வேன். சிலர் வெளிநாட்டிற்கு அகதி அந்தஸ்து பெற்று செல்லுமாறு கூறுகின்றனர். வெளிநாட்டில் இருக்கின்ற போது தான் எனது நாட்டின் அருமை தெரிந்தது.

சுருக்கம்

சாய்ந்தமருது பகுதியில்  பயங்கரவாதிகளுக்கும்  இராணுவ படையினருக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் 19 வயதான அஸ்ரிபா இறந்தார்.

சாய்ந்தமருதில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலையில் பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டில் தனது மகள் இறந்துவிட்டதாகவும் ஆனால் சம்பவத்தை நேரில் பார்க்காத காரணத்தால் யாரின் தாக்குதலில் அவள் உயிரிழந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது என இருவேறு தகவல்களை அஸ்ரிபாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவருக்கு  எங்களது மகளை திருமணம் செய்துவைத்ததாகவும் எங்கள் வீட்டில் நான்கும் பெண் பிள்ளைகள்இ இதனால் எங்கள் மூத்த மகள் அஸ்ரிபாவுக்கு வரப்போகும் மாப்பிள்ளை எங்களுக்கு மகன் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.

அதற்கு தகுந்தாற்போல் ஜாசிர் எங்களை அவரது சொந்த பெற்றோர் போல் கவனித்துக்கொண்டார். திருமணமான 41 வது நாளிலேயே ஜாசிர் தனது தொழில்நிமித்தமாக வெளிநாட்டு சென்றுவிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் ஊருக்கு திரும்பினார்.தற்போது இறந்த  அஸ்ரிபாவுக்கு 19 வயதாகிறது. அவள் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அதற்குள்ளாக அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது வேதனையளிக்கிறது என பெற்றோர் பகிர்ந்திருந்தனர்.தனது மனைவியை ஒரு குழந்தை போல ஜாசிர் பார்த்துக்கொண்டார். அஸ்ரிபா ஆசையாக ஒரு கிளியை வளர்த்தார் அந்த கிளியும் அவள் இறந்த அடுத்தநாளே இறந்துவிட்டது என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று நடந்தது என்ன?

அஸ்ரிபா தனது கணவருடன் கல்முனையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.

அப்போது அஸ்ரிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு வரவேண்டாம்  கல்முனையில் இருந்துவிட்டு நாளை வருமாறு கூறினேன். ஆனால்  அவள் எதையும் கேட்காமல் சாய்ந்தமருதுக்கு வந்துவிட்டாள்.

இடையில் அவளது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் அதிகாலை இண்டரை மணியளவில் எங்களது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார் அஸ்ரிபாவின் நிலையை அவர் கூறவில்லை.

எங்களது மகளின் நிலை என்பது குறித்து நாங்கள் அறிந்துகொள்ள முயன்றபோதுதான் ஆட்டோவிலிருந்து அவளது சடலம் மீட்கப்பட்டது என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.