கொரோனா தடுப்புக்கு 1000 கோடி தேவை!! -மோடியிடம் கோரிய எடப்பாடி-

ஆசிரியர் - Editor III
கொரோனா தடுப்புக்கு 1000 கோடி தேவை!! -மோடியிடம் கோரிய எடப்பாடி-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கi விடுத்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ காட்சி ஊடான கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடனும் தொடர்பு கொண்டு கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது தமிழகத்தில் இதுவரை 87 ஆயிரத்து 605 மாதிரிகளை பரிசோதித்ததில் 1,885 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோயாளி இறப்பு சதவீதம் 1.2 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1,020 நோயாளிகள் அதாவது 54 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர் என்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக 30 அரசு மற்றும் 11 தனியார் சோதனைக் கூடங்கள் உள்ளன. இதன் அளவு, நாளொன்றுக்கு 7,500 பரிசோதனைகள் என்றுள்ளது. இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பி.சி.ஆர். சோதனை உபகரணங்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதியை காணொலி காட்சி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் கோரியிருக்கிறேன். அந்த தொகையை உடனே அனுமதிக்க வேண்டும்.

மருத்துவ மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை மானியமாக வழங்க உடனடியாக தமிழகத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரியிருந்தார்.