முல்லைத்தீவு மக்களே அவதானம்..! கொரோனா நோயாளியுடன் பயணித்த 60 படையினர் முல்லைத்தீவுக்குள் நுழைவு, தனிமைப்படுத்த நடவடிக்கை தீவிரம்..
அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 60 இராணுவ சிப்பாய் களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 21ம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பும்போது இவர்களுடன் கூட பயணித்த வெலி சறை கடற்படைமுகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்தே குறித்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 60 படையினரையும்
தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுப்பில் வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில்
அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்தப் பேருந்தில் விடுப்பில் வீடு திரும்பிய வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் பயணித்துள்ளார்.
அவர் அநுராதபுரம் சிறிபுர என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பேருந்து வெலிஓயா,
முல்லைத்தீவு, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு படை முகாங்களுக்குச் சென்று படையினரை இறக்கியுள்ளது. சுமார் 60 படையினர் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட முகாம்களில் இறங்கியுள்ளனர்.
அவர்களை இனங்கண்டு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தலில் வைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு பேருந்தில் வந்தவர்கள் எந்ததந்த இடங்களில் தரித்து நின்றனர், கடைகளுக்குச் சென்றனரா? உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.