பிரசவத்திற்கு உதவிய பொலிஸ்!! -பிறந்த குழந்தைக்கு பொலிசின் பெயரை வைத்த தம்பதியினர்-

ஆசிரியர் - Editor III
பிரசவத்திற்கு உதவிய பொலிஸ்!! -பிறந்த குழந்தைக்கு பொலிசின் பெயரை வைத்த தம்பதியினர்-

ஊடரங்கால் உரிய நேரத்திற்கு வைத்திய சாலை செல்ல முடியாமல் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னுடைய காரில் ஏற்றி அவசரமாக வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சேர்த்த்துள்ளார். 

குழந்தையும், தாயும் நலமானதை அடுத்து உதவிய பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயரை பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை ஒரு போலீஸ் தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

இந்த உதவியை நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு உதவி செய்த போலீசின் பெயரையே வைத்துள்ள ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது.

தலைநகர் டெல்லியின் வசீர்பூர் பகுதியில் விக்ரம் மற்றும் அனுபா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான அனுபாவுக்கு நேற்று முந்தினம் (23 ஆம் திகதி வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 

இதனால் கணவர் விக்ரம் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. இதையடுத்து தனது குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட அசோக் விஹார் காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்தார். 

அவர் கொடுத்த தகவலையை அடுத்து காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் கான்ஸ்டபிள் தயவீர்(31) என்பவரை  தம்பதியருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினர். 

இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த தனது வீட்டிற்கு சென்ற தயவீர் தனது சொந்த காரை எடுத்துக்கொண்டு விக்ரம்-அனுபா தம்பதியினரின் வீட்டிற்கு விரைந்து சென்றார். அங்கு பிரசவ வலியில் துடித்த அனுபாவை தனது காரில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அனுபாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் தற்போது நலமுடன் உள்ளனர். 

இந்நிலையில், பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த அனுபாவை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குன் தனது சொந்த காரில் அழைத்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிளின் உதவியை நினைவு கொள்ளும் விதமாக தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு விக்ரம்-அனுபா தம்பதியர் தயவீர் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளனர்.